ஐதராபாத்தைச் சேர்ந்த டிவி நடிகை தற்கொலை செய்த சம்பவத்தில் பிரபல சினிமா தயாரிப்பாளர் அசோக் ரெட்டி கைது செய்யப்பட்டார்.ஆந்திராவில் மிகவும் பிரபலமான 'மனசு மமதா', 'மௌனராகம்' ,உள்பட டிவி தொடர்களில் நடித்து பிரசித்தி பெற்றவர் கோண்டபள்ளி ஸ்ராவணி (26). இவர் ஐதராபாத்தில் உள்ள மதுரா நகரில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி இவர் வீட்டுக் குளியல் அறையில் தற்கொலை செய்த நிலையில் காணப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த விசாரணையில் இவருக்குப் பிரபல தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் அசோக் ரெட்டி மற்றும் சாய் கிருஷ்ணா ரெட்டி, தேவராஜ் ரெட்டி ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு இருந்தது தெரியவந்தது. கடந்த 2018 முதல் சாய் கிருஷ்ணா ரெட்டியுடன் ஸ்ராவணி தொடர்பிலிருந்து வந்தார். இதன் பிறகு அசோக் ரெட்டியுடனும், தேவராஜ் ரெட்டியுடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது.ஸ்ராவணி தற்கொலை செய்து கொள்வதற்கு முன் கடைசியாக தேவராஜ் ரெட்டியுடன் தான் போனில் பேசியுள்ளார். அப்போது 3 பேரின் தொல்லையை தன்னால் தாங்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.
இதன் பிறகுதான் அவர் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்திச் சாய் கிருஷ்ணா ரெட்டி மற்றும் தேவராஜ் ரெட்டி ஆகியோரை கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்தனர். அசோக் ரெட்டி தலைமறைவாக இருந்து வந்தார். அவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் அசோக் ரெட்டியை நேற்று போலீசார் கைது செய்தனர். இவர் தெலுங்கில் சூப்பர் ஹிட்டாக ஓடிய 'ஆர்எக்ஸ் 100'என்ற படத்தைத் தயாரித்துள்ளார். கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் நடிகை ஸ்ராவணியை தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.