கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடந்த 5 மாதம் மக்களை மட்டுமல்ல சினிமா தொழிலையும் படாதபாடுபடுத்தி இருக்கிறது. முன்னணி நடிகர்கள் படம் வரும்போது சாலையில் டிராபிக் ஜாம் ஆகி பட்டாசுகள் சத்தமும் வேட்டுக்கள் சத்தமும் காதுகளை துளைக்கும் கொண்டாட்டம் பொது மக்களுக்குக் கொஞ்சம் இடையூறாக இருந்தாலும் அதுவொரு வகை சந்தோஷத்தையே தந்தது. அந்த காலம் மலையேறி 5 மாதம் தாண்டிவிட்டது.
கடந்த தமிழ் புத்தாண்டுக்கும் இந்த கொண்டாட்டம் இல்லை வரும் தீபாவளிக்கும் இருக்குமா என்பது தெரியவில்லை. அதையும் தாண்டி மாஸ்டர் போன்ற சில படங்கள் தியேட்டர் திறப்புக்காகக் காத்திருக்கிறது.பொன்மகள் வந்தாள், பெண்குயின் படங்கள் ஒடிடியில் ரிலிஸ் ஆனதை அடுத்து அக்டோபர் இறுதியில் சூர்யா நடித்திருக்கும் சூரரைப்போற்று படமும் ஒடிடியில் ரிலீஸ் ஆகிறது. அதேபோல் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படமும் ஒடிடியில் வெளியாக உள்ளதாக அவ்வப்போது தகவல் வெளியான வண்ணமிருக்கிறது அதைப் படத் தயாரிப்பு நிறுவனம் மறுத்தும் வருகிறது.
இந்நிலையில் மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய் மன்றத்தினர் ஆதரவற்றோர் ஆசிரமத்திற்கு உதவிகள் வழங்க விழா ஏற்பாடு செய்திருந்தனர். அதில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கலந்துக் கொண்டார்.பின்னர் அவரிடம் மாஸ்டர் படம் ஒடிடியில் ரிலீஸ் ஆகுமா, தியேட்டரில் ரிலீஸ் ஆகுமா என்று கேட்டதற்குப் பதில் அளித்தார். அவர் கூறும்போது,மாஸ்டர் படம் நிச்சயம் தியேட்டரில் தான் வெளியாகும். ஒடிடியில் வெளியாகாது. கடந்த ஏப்ரல் மாதமே படத்தை ரிலீஸ் செய்ய எண்ணியிருந்தோம் எதிர்பாராத சூழலால் ரிலீஸ் செய்ய முடியவில்லை.
தற்போதுள்ள சூழலில் தியேட்டர்கள் திறப்பது பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதில் முடிவாகி தியேட்டர்கள் எப்போது திறக்கிறதோ அப்போது படம் வெளியாகும் அதற்கான நாளை ரசிகர்கள் எதிர்பார்ப்பது போல் நானும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றார் லோகேஷ் கனகராஜ்.இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய்யின் மாஸ்டர் படம் தியேட்டரில் தான் வரும் என்று கூறியிருப்பதை விஜய் ரசிகர்கள் வரவேற்றிருப்பதுடன் அந்த தகவலை சமூக வலைத்தளத்தில் பரபரப்பாகப் பகிர்ந்து வருகின்றனர்.