பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:தன்னுடைய இனிமையான குரலால் கோடிக்கணக்கான இசை ரசிகர்களைக் கொள்ளை கொண்ட எஸ்பிபி என அன்பாக அழைக்கப்படும் எஸ்.பி. பாலசுப்ரமணியம் நோயின் காரணமாகப் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது மிகுந்த அதிர்ச்சியும் மனவருத்தமும் அளிக்கிறது.
இந்திய அளவில் 16 இந்திய மொழிகளில் 40 ஆயிரம் பாடல்கள் பாடி தனக்கென்று ஒரு தனிபாணியை உருவாக்கி இசை நெஞ்சங்களை மகிழ்வித்த கின்னஸ் சாதனையாளர்.
நான் நடித்த சாமுண்டி படத்தில் அவர் பாடிய முத்துமணியே முழுநிலவே, மண்ணைத் தொட்டு கும்பிட்டுப் பாடல்கள். அரவிந்தன் படத்தின் ஈரநிலா பாடல் சின்னதுரை படத்தின் உன்னைப்போல யாருமில்ல சின்னதுரையே பாடல்கள் என்றும் மறக்க முடியாதவை.
74 வயதிலும் தனது இளமைக் காலத்தில் கொண்டிருந்த குரல் வளத்தை விட மெருகான குரல் வளத்தால் இன்றளவும் சாதனை படைத்த அவருடைய பேராற்றல். அத்தகையவரின் இழப்பு நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு மிகப்பெரிய இழப்பாகும். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்தித்து அவரது தேனிசை கானம் தேவர் உலகத்தை திருப்திப்படுத்திக் கொண்டிருக்கும் என் நம்புகிறேன்.
இவ்வாறு சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்திருக்கிறார்.