எஸ்பிபி நம்மிடம் இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை.. பயணங்கள் முடிவதில்லை நடிகர் உருக்கம்..

Actor Mohan Condolence To SPB

by Chandru, Sep 26, 2020, 11:59 AM IST

பயணங்கள் முடிவதில்லை, விதி, மவுன ராகம் உள்ளிட்ட 80 மற்றும் 90களில் வெளியான பல படங்களில் நடித்திருப்பவர் மோகன். இவர் எஸ்பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இசையுலகிற்கு இதுவொரு கருப்பு தினம். ஏனென்றால், பாடும் நிலா நம்மை விட்டு மறைந்துவிட்டார். 45,000-க்கும் அதிகமான பாடல்களைப் பாடி நம்மை எல்லாம் மகிழ்வித்தவர் இன்று நம்மிடம் இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை. இந்த இழப்பை எந்த வார்த்தைகளைப் போட்டு நிரப்புவது என்று தெரியாமல் அல்லாடுகிறேன்.

எஸ்பிபி சார் செய்த சாதனைகளை இனிமேல் யாராவது செய்ய முடியுமா என்று தெரியவில்லை. அவருடைய இசைப்பயணத்தில் எனக்கும் சில பாடல்களைப் பாடியுள்ளார் என்று நினைக்கும் போது மகிழ்ச்சி. முதல் பாடலிலிருந்து கடைசியாகப் பாடிய பாடல் வரை அவருடைய குரல் ப்ரெஷ் ஆகவே இருக்கும். அதேபோல் அனைவருக்குமே எதிரிகள் என்று யாராவது இருப்பார்கள். எனக்கு தெரிந்தவரை எதிரிகளே இல்லாத மனிதர் எஸ்.பி.பி சார்.அது மிகவும் அபூர்வம். அந்தளவுக்கு அனைவருடனும் மிகவும் நட்பாகப் பழகக்கூடியவர்.

எண்பதுகளில் எல்லா ஹீரோக்களுக்கும் எஸ்.பி.பி சார் பாடல்களே அமைந்திருக்கும். என்னுடைய படங்களிலும் அவர்தான் பாடியிருப்பார். அவர் குரலின் மேஜிக் என்னவென்றால், எஸ்.பி.பி. சார் யாருக்குப் பாடினாலும் அவர்களே பாடுவது போல் இருக்கும். அப்படித்தான் எனக்கும் அமைந்தது. அவர் பாடிய பல பாடல்களுக்கு நான் நடித்திருக்கிறேன் என்பது எனக்குப் பெருமையான விஷயம்.இன்னும் பல நூறு ஆண்டுகளானாலும் அந்தக் குரல் மூலம் நமக்குச் சந்தோஷத்தை கொடுத்துக் கொண்டே இருப்பார். அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். அவர் குடும்பத்தாருக்க்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.

இவ்வாறு நடிகர் மோகன் தெரிவித்திருக்கிறார்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை