பிரபல மலையாள நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் போலீஸ் தரப்பு சாட்சி ஒருவருக்குக் கொலை மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கடந்த 3 வருடங்களுக்கு முன் பிரபல மலையாள நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக அந்த நடிகையிடம் டிரைவராக பணிபுரிந்து வந்த சுனில் குமார் என்பவர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த சம்பவத்திற்குப் பிரபல நடிகர் திலீப் தான் சதித்திட்டம் தீட்டினார் எனத் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் திலீப்பை கைது செய்து சிறையில் அடைத்தனர்.85 நாள் சிறைவாசத்திற்குப் பின்னர் நிபந்தனை ஜாமீனில் இவர் விடுவிக்கப்பட்டார்.இந்த வழக்கு விசாரணை கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன் இந்த வழக்கில் போலீஸ் தரப்பு சாட்சியங்களாகச் சேர்க்கப்பட்டிருந்த நடிகை பாமா மற்றும் நடிகர் சித்திக் ஆகியோர் பல்டி அடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட நடிகைக்கும், நடிகர் திலீப்புக்கும் இடையே மோதல் நடந்ததை தாங்கள் நேரில் பார்த்ததாகப் போலீசில் கூறிய இவர்கள், பின்னர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்த போது தாங்கள் அந்த சம்பவத்தைப் பார்க்கவில்லை என்று கூறினர். இதையடுத்து இவர்கள் இருவரும் பிறழ் சாட்சிகளாக அறிவிக்கப்பட்டனர். இதையடுத்து நடிகை பாமாவுக்கு எதிராக சமூக இணையங்களில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. நடிகைகள் ரேவதி, ரம்யா நம்பீசன், ரீமா கல்லிங்கல் உட்படப் பலர் பாமாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் போலீஸ் தரப்பு சாட்சியாக உள்ள விபின் லால் என்பவர் இன்று கொச்சி போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பது: நடிகை பலாத்கார வழக்கில் ஏற்கனவே போலீசுக்கு கொடுத்த வாக்குமூலத்தைத் திருத்த வேண்டும் என்றும், விசாரணையின் போது குற்றம் சுமத்தப்பட்டவருக்குச் சாதகமாகச் சாட்சியம் அளிக்க வேண்டும் என்றும் கூறி எனக்கு போனிலும், கடிதங்கள் மூலமாகவும் மிரட்டல்கள் வருகின்றன. குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராகச் சாட்சியம் அளித்தால் உயிருடன் இருக்க முடியாது என்று மிரட்டுகிறார்கள். எனவே எனக்குத் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு விபின் லால் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து கொச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.