கொரோனா கவச உடை அணிந்து படப்பிடிப்புக்கு புறப்பட்டார் மீனா

Actress meena to join drishyam 2 soon

by Nishanth, Sep 30, 2020, 13:22 PM IST

திரிஷ்யம் 2 படத்தில் நடிப்பதற்காக பிரபல நடிகை மீனா கொரோனா கவச உடையணிந்து சென்னையில் இருந்து கொச்சிக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார்.
லாக் டவுனுக்குப் பின்னர் சினிமா படப்பிடிப்புகள் தொடங்கி விட்டன. கொரோனா நிபந்தனைகளைப் பின்பற்றி குறைந்த எண்ணிக்கையில் ஆட்களை வைத்து படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. மலையாளத்தில் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு முன் மோகன்லால், மீனா ஆகியோர் நடிப்பில் வெளியாகி பம்பர் ஹிட்டாக ஓடிய படம் திரிஷ்யம். இந்தப் படம் கமல், கவுதமி நடிப்பில் தமிழில் பாபநாசம்' ஆக வெளிவந்தது. தமிழில் மட்டும் இல்லாமல் கன்னடம், தெலுங்கு, இந்தி உள்பட பல மொழிகளில் இந்தப் படம் ரீமேக் ஆனது.


இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு திரிஷ்யம் 2 என்ற பெயரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது. இந்தப் படத்திலும் மோகன்லாலுக்கு மீனா தான் ஜோடியாகிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு கொச்சியில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தொடங்குவதற்கு 2 வாரங்களுக்கு முன்பே நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உட்பட அனைவரும் தனிமைப்படுத்தப் பட்டனர். அனைவருக்கும் ஹோட்டலில் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு அங்கிருந்து வெளியேற தடை விதிக்கப்பட்டது.
படப்பிடிப்பில் கலந்து கொள்பவர்கள் வெளியிடங்களுக்குச் செல்லவும், வெளிநபர்கள் படப்பிடிப்பு குழுவினருடன் தொடர்பு கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அனைவரும் கொரோனா பரிசோதனைக்குப் பின்னரே படப்பிடிப்பில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் மோகன்லாலும் கொரோனா பரிசோதனை நடத்திய பின்னர் படப்பிடிப்பில் இணைந்தார்.
இந்நிலையில் நடிகை மீனா படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கொச்சி புறப்பட்டு சென்றார். விமானத்தில் பிபிஇ கிட் எனப்படும் கவச உடை அணிந்து இவர் பயணம் செய்தார். இந்த உடை அணிந்த அனுபவம் குறித்து நடிகை மீனா கூறியது: கவச உடை அணிந்த என்னை பார்க்கும் போது விண்வெளி பயணத்திற்கு புறப்பட்டது போல தோன்றும். ஆனால் ஆனால் உண்மையில் நான் ஒரு போருக்கு புறப்பட்டது போல எனக்கு தோன்றியது. இது 7 மாதங்களுக்கு பின்னர் நான் சென்ற பயணம் ஆகும்.


ஆள் அரவமில்லாத விமான நிலையத்தை பார்த்தபோது எனக்கு அதிசயமாகவும், பீதியாகவும் இருந்தது. விமானத்தில் நான் மட்டும்தான் இந்த கவச உடையை அணிந்திருந்தேன். அதுவும் எனக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. இது எனக்கு கொஞ்சம் கூட பொருத்தமில்லாத ஒரு உடையாகும். இந்த உடையின் எடையும் கூடுதல், அணிந்தால் உஷ்ணமும் அதிகமாக இருக்கும். ஏசியில் இருந்தால் கூட வியர்வை வரும். கையுறை அணிந்திருந்ததால் முகத்தைக்கூட துடைக்க முடியவில்லை. இந்த உடையை அணிந்திருந்த போதுதான் நமது உயிரை காப்பாற்றுவதற்காக டாக்டர்களும், நர்சுகளும் இந்த கவச உடைகளை அணிந்து எவ்வளவு சிரமப்படுகின்றனர் என எனக்கு புரிந்தது.
மிக சிரமமான இந்த உடையை அணிந்து அவர்கள் நமக்காக சேவை புரிகின்றனர். அவர்களது சீரிய பணிக்கு எனது சல்யூட். சுகாதாரத் துறையினரின் இந்த தன்னலமில்லாத சேவைக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது என்று கூறுகிறார் நடிகை மீனா.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More Cinema News

அதிகம் படித்தவை