பாலிவுட் பாடகிகள் பலர் தமிழில் பாடல்கள் பாடி உள்ளனர், இப்போதும் பாடி வருகின்றனர். பெங்காலி மொழி பாடகியாக இருந்தாலும் இந்தி, தமிழ் போன்ற பல மொழிகளில் பாடல்கள் பாடி இருப்பவர் மோனாலி தாகூர். இவர் சில படங்களில் நடித்தும் இருக்கிறார். இவரது தந்தை சக்தி தாகூர். பெங்கால் மொழி பட நடிகர். இவர் வயது முதிர்வு காரணமாக நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு 73 வயது. மகள் மோனாலி மீது அதிக பாசம் வைத்திருந்தவர் சக்தி தாகூர் .
தந்தையின் மரணத்தால் வேதனையில் ஆழ்ந்த மோனாலி அவரை எண்ணி உருக்கமான மெசேஜ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். அதில் கூறும்போது,அப்பா உங்களை கண்டு தான் நான் என்னை சீரமைத்துக் கொண்டேன். நல்ல நடிகர் என்று மட்டுமல்லாமல் அந்த பெருமையை பந்தாவாக்கிக்கொள்ளாமல் பணிவாக மாற்றிக்கொண்டு எல்லோரிடமும் பழகும்போது அவ்வளவு பணிவும் எளிமையும் காட்டிட்னீர்கள். உங்களைப் போல் இருக்கவே நானும் ஆசைப்படுகிறேன். உங்களை தவிர இந்த உலகத்தில் என் மீது அதிக பாசம் வைத்தவர் வேறு யாரும் கிடையாது. உங்களைபோல் சாதிக்க வேண்டும் என்று எண்ணுவேன். அதுதான் என்னை இந்த நிலைக்கு உயர்த்தி இருக்கிறது. உங்களை இழந்து மனம் வாடிப்போய் இருந்தாலும் உங்களின் மகள் என்று சொல்வதில்தான் எனக்கு பெருமை என குறிப்பிட்டிருக்கிறார்.
மோனாலி கடந்த வாரம் தனக்கு ரகசிய திருமணம் நடந்தது பற்றி வெளிப்படுத்தி இருந்தார். சுவிட்சர்லாந்தை சேர்ந்த மைக் ரிச்டர் என்பவரை மணந்தார். அவர் அங்கு ரெஸ்டாரன்ட் வைத்து நடத்தி வருகிறார். இவர்களின் காதல் திருமணம் கடந்த 2017ம் ஆண்டே நடந்து முடிந்தது. ஆனால் அது பற்றி வெளியில் சொல்லும்படி நடக்க வில்லை என்பதால் திருமணத்தை இதுவரை மூடி மறைந்து வந்தாராம் மோனாலி தாகூர். இவரது தங்கை மெஹுலி என்பவரும் பாடகிதான்.
மோனாலி இளையராஜா இசையில், 60 வயது மாநிறம் படத்தில் நாளும் நாளும் என்ற பாடலை பாடி உள்ளார். ராதா மோகன் இயக்கிய இப்படத்தில் விக்ரம்பிரபு, பிரகாஷ் ராஜ் நடித்திருந்தனர். தவிர. மத யானைக் கூட்டம் என்ற படத்தில் யாரோ யாரோ என்ற பாடலை மோனாலி பாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.