கடந்த 12 வருடங்களுக்கு முன் மலையாள சினிமா நடிகர் சங்கத்திற்கு நிதி திரட்டுவதற்காக அனைத்து நடிகர்களும் சேர்ந்து நடித்து 20 20 (டுவென்டி டுவென்டி) என்ற பெயரில் ஒரு படம் தயாரிக்கப்பட்டது.அதே போல அனைத்து நட்சத்திரங்களின் நடிப்பில் மீண்டும் ஒரு படத்தைத் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.மலையாள சினிமா நடிகர்களுக்கு 'அம்மா' என்ற பெயரில் ஒரு சங்கம் செயல்பட்டு வருகிறது.
தற்போது இந்த சங்கத்தின் தலைவராகப் பிரபல நடிகர் மோகன்லால் உள்ளார். இந்த நடிகர் சங்கத்தில் வயதான மூத்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் 5,000 ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் சங்கத்திற்கு நிதி திரட்டுவதற்காகக் கடந்த 2008ல் 20 20 என்ற பெயரில் ஒரு படம் உருவானது.
பிரபல டைரக்டர் ஜோஷி இயக்கிய இந்தப் படத்தில் மம்மூட்டி, மோகன்லாலில் தொடங்கி மது, சுரேஷ் கோபி, ஜெயராம், நயன்தாரா, பாவனா உட்பட பெரும்பாலான நட்சத்திரங்கள் இணைந்து நடித்தனர். இதுவரை எந்த மொழியிலும் இதுபோல அனைத்து நடிகர் நடிகைகளும் சேர்ந்து நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்தப் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் யாரும் ஒரு பைசா கூட சம்பளம் வாங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விஷயமாகும். இந்த படத்தை முன்னணி நடிகர் திலீப் தான் தயாரித்தார். 7 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படம் சூப்பர் ஹிட்டாக ஓடியதால் 33 கோடி வசூலித்தது.
இந்நிலையில் அதே போல மீண்டும் ஒரு படத்தைத் தயாரிப்பது குறித்து மலையாள நடிகர் சங்கம் ஆலோசித்து வருகிறது. இந்த கொரோனா காலத்தில் பெரும்பாலான கலைஞர்கள் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். இவர்களுக்கு உதவுவதற்காக மீண்டும் அனைத்து நடிகர், நடிகைகளும் இணையும் ஒரு படத்தைத் தயாரிப்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தை மூத்த இயக்குனர் டி.கே. ராஜீவ் குமார் இயக்குவார் எனத் தெரிகிறது. படத்தைத் தயாரிப்பது யார் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. விரைவில் இந்த புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் எனக் கருதப்படுகிறது.