விஜய் சேதுபதி, அதர்வா, நயன்தாரா நடித்திருந்த இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்துக் கலக்கியவர் அனுராக் காஷ்யப். இவர் இந்தி பட இயக்குனர் ஆவார். கேங்ஸ் ஆப் வாசேப்பூர், தேவ்டி, தி லன்ச் பாக்ஸ், பிளாக் ப்ரைடே போன்ற இந்தி படங்களை இயக்கி உள்ளார். இவர் மீது நடிகை பாயல் கோஷ் கடந்த 2 வாரத்துக்கு முன் பாலியல் வன்கொடுமை புகார் கூறியதுடன் தன்னை பட வாய்ப்பு தருவதாகத் தனது வீட்டுக்கு அழைத்து பலாத்காரம் செய்ய முயன்றார் என்றதுடன் மும்பை வெர்சோவா போலீசில் அனுராக் மீது புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அனுராக்கை அழைத்து விசாரித்தனர்.
பாயல் கோஷ் தன் மீது அளித்த புகாரை மறுத்த அனுராக், அவர் பாலியல் பலாத்கார முயற்சி நடந்ததாகக் கூறும் நாளில் நான் இலங்கையில் படப்பிடிப்பில் இருந்தேன் என்று கூறியதுடன் அதற்கான ஆதாரங்களும் சமர்ப்பித்தார்.
இதற்கிடையில் பாயல் கோஷ் சில நடிகைகள் பெயரைச் சொல்லி அவர்களிடமும் அனுராக் தவறாக நடந்துக் கொண்டார் என்றார். ரிச்சா சதா, மஹி கில், ஹூமா குரோஷி ஆகியோரிடம் அனுராக் பாலியல் தொல்லையில் ஈடுபட்டார் என்றார். ஆனால் அதை சமந்தப்பட்ட நடிகைகள் மறுத்திருந்தனர். இதில் நடிகை ரிச்சா சதா, நடிகை பாயல் கோஷ் மீது கோபம் அடைந்தார். தனது சொந்த விவகாரத்தில் தேவை இல்லாமல் என் பெயரைப் பாயல் இழுத்திருக்கிறார் என்றதுடன் அதற்காக அவர் மீது 1.1கோடி மான நஷ்ட ஈடு கேட்டு மும்பை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே நடிகைகள் ராதிகா ஆப்தே, டாப்ஸி போன்றவர்கள் அனுராக் காஷ்ய பிறகு ஆதரவாகப் பேசி இருந்தனர். சில தினங்களுக்கு முன் நடிகை தனுஸ்ரீ தத்தாவும் பாயல் கோஷ் சொல்லும் புகார் மீது மற்றவர்களைப் போல் எனக்கும் சந்தேகம் உள்ளது. அதுபற்றி கருத்துச் சொல்ல விரும்பவில்லை என்று ஒதுங்கிக் கொண்டார்.பாயல் கோஷ் மீது ரிச்சா மான நஷ்ட வழக்கு தொடர்ந்தவுடன் பாயல் பயந்தார். இது எதிர்பாராத அதிர்ச்சியாக அமைந்தது. உடனடியாக சரண் அடைந்திருக்கிறார். ரிச்ச தொடர்ந்த மான நஷ்ட வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி ஏ.கே.மோகன் விசாரித்தார்.
பாயல் சார்பில் அவரது வழக்கறிஞர் நிதின் சத்புதே ஆஜரானார். ரிச்சா சதாவுக்கு எதிரான தன்னுடைய கருத்தைப் பாயல் கோஷ் திரும்ப பெற்றுக்கொள்வதாகத் தெரிவித்தார். மேலும் ரிச்சா சதா மீது பாயல் நல்ல மரியாதை வைத்திருக்கிறார். தனது வார்த்தைக்காக அவர் ரிச்சாவிடம் மன்னிப்பு கோரி உள்ளார். ரிச்சாவை பற்றிக் கூறிய கருத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறார் என்றார். பின்னர் டிவிட்டரில் பாயல் கோஷ் கூறும்போது, ரிச்சா சதாவுக்கு எதிராக நான் எதுவும் சொல்லவில்லை. பெண்கள் ஒருவருக்கொருவர் தோள் கொடுக்க வேண்டும் என்று எண்ணினேன். அனுராக் காஷ்யப்புக்கு எதிராக மட்டுமே நான் போராடுகிறேன். அவருடைய நிஜ முகத்தை உலகுக்கு அம்பலப் படுத்துவேன் என்றார்.