பிரபல ஹீரோ நடிக்கும் படம்: பாரதிராஜா ஆவேசம்.. இனத்துரோகி படத்தில் நடிப்பதா?

Bharthiraja Request Vijaysethupathi Not To Act In Muralitharan Bip pic

by Chandru, Oct 15, 2020, 13:07 PM IST

இலங்கை கிரிகெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை படமான 800 என்ற படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக அறிவிப்பு வந்ததிலிருந்து அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் இனத் துரோகம் செய்தவர் வாழ்க்கையில் விஜய் சேதுபதி நடிக்க வேண்டாம் என்று கூறி உள்ளார்.

பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
அன்பின் கதாநாயகன் விஜய் சேதுபதிக்கு, பாசத்திற்குரிய பாரதிராஜா எழுதிக்கொள்வது,
வணக்கம். மக்களிடம் நல்ல பெயர் எடுப்பது ரொம்பக் கடினம். ஆனால் பொதுமக்கள் வெகு வேகமாகவே உங்கள் மீது அன்பைக் கொட்டியுள்ளனர்.

அதற்கு இயல்பான, யதார்த்தமான பேச்சும் .. கடைக்கோடி மக்களின் எண்ணப் பிரதிபலிப்புமே காரணம். இன்னும் நீண்டு செல்லும் இந்தப் பயணத்தில் மேலும் புகழ் பெறவே வாழ்த்துகிறேன். நிற்க! தாங்கள் செய்ய விருக்கும் 800 என்ற படம் பற்றிக் கேள்விப்பட்டேன். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனை பற்றிய பயோபிக் படமாக அது உருவாகப் போவதாக அறிந்தேன். நம் ஈழத்தமிழ்ப் பிள்ளைகள் செத்து விழுந்தபோது பிடில் வாசித்தவர் இந்த முத்தையா. சிங்கள இனவாதத்தை முழுக்க முழுக்க ஆதரித்தவர்.

விளையாட்டு வீரனாக என்ன தான் சாதித்தாலும், தன் சொந்த மக்கள் கொல்லப்பட்டபோது சிரித்து மகிழ்பவர் என்ன சாதித்து என்ன பயன்? எத்தனையோ துரோகங்களை எம்மினம் கடந்து வந்துள்ளது. எங்களைப் பொருத்தவரை முத்தையா முரளிதரனும் ஒரு நம்பிக்கைத் துரோகிதான். அடிபட்ட வலியை நினைவு கூறும் மக்கள் என்னிடம், ஏன் நம்ம விஜய் சேதுபதி அதில் நடிக்கிறார்? மறுத்திருக்கலாமே... எனக் கேட்கின்றனர்.


அவர்களின் வேதனையும் வலியும் புரியும் அதேசமயம் அவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் அன்பையும் என்னால் காண முடிந்தது. உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் சார்பாக நான் கோரிக்கை வைக்கிறேன். இனத்துரோகம் செய்த ஒருவரின் முகம் கால காலமாக உங்கள் முகமாக வெறுப்போடே எம் மக்கள் பார்க்க வேண்டுமா? எந்த வகையிலாவது தமிழின வெறுப்பாளனின் வாழ்வியல் படத்தில் நடிப்பதைத் தவிர்க்க முடியுமா பாருங்கள். தவிர்த்தால் எப்போதும் எம் ஈழ மக்களின் மனதிலும், என் மனதிலும் நன்றியோடு நினைவுகொள்ளப்படுவீர்கள்.

பின் குறிப்பு : 800 திரைப்படத்தை எடுக்க இருக்கும் Dar media நிறுவனம் நேற்று மாலை ஒரு அறிக்கை வெளியிட்டதை அறிந்தேன்.800 - திரைப்படம் அரசியல் படமில்லை. ஒரு விளையாட்டு வீரனின் வாழ்க்கை வரலாற்றை மட்டுமே படமாக்க இருக்கிறோம்.. இந்த திரைப்படம் எடுத்தால் பல ஈழத்தமிழர் திரைக் கலைஞர்கள், தொழில் நுட்பக் கலைஞர்களின் திறமை உலக அரங்கில் வெளிக்காட்ட அடித்தளமாக இருக்கும் என்று வெளியீட்டு இருந்தீர்கள். துரோகிக்குத் துணை போகும் உங்களை நினைத்துக் கோபப்படுவதா ? இல்லை உங்கள் அறியாமையை கண்டு சிரிப்பதா ? அனைத்து துறைகளிலும் உலகரங்கில் தமிழர்களின் பங்களிப்பு என்னவென்று வரலாற்றை புரட்டிபாருங்கள்.. பாடம் சொல்லும். ஒரு செய்தியை அழுத்தமாக இங்குப் பதிவிட விரும்புகிறேன். உங்களுக்கு வேண்டுமானால் முத்தையா முரளிதரன் சிறந்த விளையாட்டு வீரனாகக் கருதலாம். எங்களைப் பொறுத்த வரை அவர் இனத் துரோகி. ஒரு போதும் தமிழினம் மன்னிக்க இயலாது. ஒரு போராளியின் தியாகம் , ஆயிரம் முத்தையா முரளிதரன் வந்தால் கூட ஈடு செய்யமுடியாது.

உண்மையிலேயே நீங்கள் தமிழர்களின் திரைக் கலைஞர்கள், தொழில் நுட்பக் கலைஞர்களின் திறமையைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால்.. அகிம்சை வழியில் போராடி தீயாக இன்றும் சுடர் விட்டுக் கொண்டிருக்கும் தம்பி திலீபனின் வாழ்க்கை வரலாறு, அல்லது எங்கள் மக்களுக்காகத் தன்னையே உயிராயுதமாக உருக்கி எம் மண்ணோடு , காற்றோடு, கலந்த போன பல்லாயிரக் கணக்கான போராளிகளில் , ஒரு மாவீரனின் வாழ்க்கை வரலாற்றை , உலகரங்கில் எடுக்க முன் வா... ஒட்டு மொத்த தமிழர்களும், திரைத் துறையினரும் இலவசமாக பணியாற்றக் காத்திருக்கிறோம்.

இவ்வாறு ஆவேசமாக இயக்குநர் பாரதிராஜா கூறி உள்ளார்.

You'r reading பிரபல ஹீரோ நடிக்கும் படம்: பாரதிராஜா ஆவேசம்.. இனத்துரோகி படத்தில் நடிப்பதா? Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை