'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் "கபாலி " .
இயக்குனர் பாலாவின் தம்பி சந்திரமௌலி தனது மெளலி பிக்சர்ஸ் சார்பில் உருவாக்கி உள்ள படத்தின் பெயர் " கபாலி டாக்கீஸ் ". இதில் கதையின் நாயகனாக முருகானந்தம் நடித்துள்ளார். இவர், விஷ்ணு விஷால் , கேத்தரின் தெரேசா, சூரி நடிக்க இவர்களுடன் கவுரவ வேடத்தில் விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த " கதாநாயகன்" படத்தின் இயக்குனராவார். ஏற்கனவே " இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ", "மரகத நாணயம்" படங்களில் காமெடியில் நடித்துக் கலக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கபாலி டாக்கீஸ் படத்தில் கதாநாயகியாக மேக்னா ஹெலன் மற்றும் கே.பாக்கிய ராஜ், ஜி.எம்.குமார், இமான் அண்ணாச்சி, சார்லி, மதன் பாப், டான்சர் டியாங்கனா, பி.எல்.தேனப்பன். வேலு பிரபாகரன், வர்ஷன், நவீன், ராஜ்குமார், சக்ரி, ஷீலா, சாய் பிரியா இன்னும் பலர் நடித்துள்ளனர்.ஜெயசீலன் - முனி கிருஷ்ணன் இருவரும் அரங்கம் அமைக்கின்றனர். ராதிகா - சங்கர் நடனப் பயிற்சி அளிக்கின்றனர். தவசி ராஜ் சண்டைப் பயிற்சி அளிக்கிறார். சினேகன், மதுரகவி, தமிழ் இயலன், விஜய சாகர் பாடல்கள் எழுதுகின்றனர். ராஜேஷ் கண்ணா படத்தொகுப்பு செய்கிறார். சபேஷ் - முரளி இசை அமைக்கின்றனர். ஆர்.சுரேஷ்குமார் இணை தயாரிப்பு செய்கிறார். மெளலி பிக்சர்ஸ் சார்பில் பி.சந்திர மெளலி தயாரித்துள்ளார்.கதை வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து ரவிசீனிவாசன் இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இவர் ஜி.எம்.குமார், வேலு பிரபாகரன் உட்பட முன்னணி இயக்குனர்களிடம் உதவியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கபாலி டாக்கீஸ் படம் பற்றி இயக்குனர் ரவி சீனிவாசன் கூறுகையில், " அண்ணன், அண்ணி, அவர்களின் மகள் ஆகியோருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் முருகானந்தம். ஒரு கட்டத்தில் அண்ணன் இறந்து விடுகிறார். வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற வெறியோடு வலம் வந்த முருகானந்தத்திற்கு அண்ணனின் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது. அதிலிருந்து மீண்டு தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் தடம் பதித்துச் சாதிக்க நினைக்கிறான். பல தயாரிப்பாளர்களைச் சந்தித்துக் கதை சொல்லி இயக்குனர் வாய்ப்பு கேட்டு அலைகிறான். கிடைக்கவில்லை. இந்த நிலையில் முருகானந்தம் தன் பால்ய நண்பனை சந்திக்கிறான்.இவன் நிலை உணர்ந்து ' உனக்கு நானே வாய்ப்பு தருகிறேன் என்று கூறி முருகானந்தத்தை இயக்குனராக ஒப்பந்தம் செய்து நண்பனே படத்தைத் தயாரிக்கிறான். படம் முடிவடைந்தது.
எந்த நண்பன் இவனுக்காகப் படத்தைத் தயாரித்தானோ அவன் மூலமே முருகானந்தத்திற்கு பேரிடி விழுந்தது. அது என்ன? பல அதிர்ச்சிகளையும் , பேரிடர்களையும் சந்தித்துத் திரை உலக வாழ்க்கையிலும், நிஜ வாழ்க்கையிலும் முருகானந்தம் வென்றானா?" என்பதை வெகுஜனங்கள் ரசிக்கும் வண்ணம் ஜனரஞ்சகமான பொழுது போக்கும் அம்சங்கள் நிறைந்த படமாக இயக்கி உள்ளேன். குறிப்பாக 1980ல் ஆரம்பிக்கும் கதை 2020 ல் முடியுமாறு திரைக் கதை அமைத்துள்ளேன். இந்தப் படம் முழுக்க முழுக்க சென்னையில் மந்தைவெளி மற்றும் மைலாப்பூர் பகுதிகளில் படமாக்கி உள்ளேன்.
அன்றைய சென்னை எப்படி இன்று உருமாறி உள்ளது என்பதனையும் அழகாகப் படம் பிடித்துள்ளேன். இதில் நிறையச் சம்பவங்கள் என் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களின் அடிப்படையில் தான் காட்சிகள் அமைத்து இருக்கிறேன். சினிமாவை நேசித்துச் சுவாசிக்கும் அனைவருக்கும் இந்தப் படம் பிடிக்கும் சிறு வேடங்களில் நடித்துள்ள இயக்குனர் முருகானந்தத்தை கதையின் நாயகனாக அறிமுகப்படுத்தி உள்ளேன்" என்றார்."விரைவில் வெளிக்கொண்டு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்தாகி விட்டது. மக்கள் தங்கள் கவலை மறந்து குடும்பத்தோடு ரசிக்கும் படமாக இருக்கும் " என்கிறார் தயாரிப்பாளர் பி.சந்திர மெளலி.