இலங்கை கிரிக்கெட் அணி வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை சரித்திரம் 800 என்ற பெயரில் உருவாகிறது. இதில் முரளிதரன் வேடத்தை விஜய் சேதுபதி ஏற்று நடிக்கிறார். அதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டபோது இலங்கை அதிபர் ராஜ பக்சேவுக்கு ஆதரவாகப் பேசியவர் முரளிதரன் எனவே அவரது வாழ்க்கை படத்தில் நடிக்கக்கூடாது என விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்துக்கு சரத்குமார் ஆதரவு தெரிவித்திருக்கிறார். இது குறித்து அகில இந்தியச் சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் சரத்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை வருமாறு:2019-ல் முடிவு செய்யப்பட்டு, உருவாகி வரும் 800 திரைப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர்கள் வெளியான நிலையில் பலரும் இதனைச் சர்ச்சைக்குரிய விஷயமாகக் கருதி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கலைத்துறை, அரசியல் தலையீட்டுக் காரணங்களால் சவால்களை எதிர் கொள்வது வருந்தத்தக்கது. இந்திய நாட்டு வருவாயில் சுமார் ரூ.93,000 கோடி பங்களிப்பை ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்கு துறை வழங்குகிறது. கொரோனா சூழலில் அனைத்து
தரப்பினரும் பொருளாதார பின்னடைவால் பாதிக்கப்பட்டிருக்கும்போது, பல
சோதனைகளைக் கடந்து முன்னேற்றம் காண்பதற்காக புதுப்புது படைப்புகளைக்
கொடுக்க தயாராக உள்ள கலைத்துறையின் ஊக்கத்தைத் தடுக்கின்ற முயற்சி
ஏற்புடையதல்ல. நாட்டின் வளர்ச்சிக்கோ, பொருளாதார வளர்ச்சிக்கோ இது போன்ற நிகழ்வுகள் உதவப் போவதில்லை.காந்தி படத்தை மக்கள் எப்படி விரும்பி ரசித்தார்களோ, அதே அளவிற்கு ஹிட்லர் படத்தையும் மக்கள் விரும்பி ரசிக்கத் தான் செய்வார்கள் என்பதை நாம் மறந்துவிட வேண்டாம்.
எந்தவொரு படைப்பிலும் ஒரு இனத்தை இழிவுபடுத்திக் காட்சிப்படுத்தக் கூடாதே தவிர, தனிமனிதன் தன் வாழ்க்கையில் வளர்ச்சியடைய ஊக்கமளிக்கும் வகையிலான சாதனையாளரின் சரித்திரத்தை தெரிந்துகொள்வதில் தவறில்லை. ஒரு சாதாரண மனிதன் பல போராட்டங்களுக்கு பிறகு, எப்படி விளையாட்டு துறையில் உச்சநிலையை அடைந்தான் என்பதைச் சித்தரிக்கும் கதைக்களத்தை வரவேற்க வேண்டும். அதை
அரசியல் ரீதியாக மட்டும் அணு எதிர்ப்பு தெரிவிப்பது சரியாக இருக்காது.முக்கியமாக, கலைஞர்களுக்கு அணை கட்டக்கூடாது. எல்லைகளைக் கடந்து கதைக்களத்தைத் தேர்வு செய்து நடிக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு. ஒரு நடிகர் இப்படித் தான் நடிக்க வேண்டும், இந்த கதாபாத்திரத்தில் தான் நடிக்க வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்தால் கலை உலகம் முழு சுதந்திரத்துடன் செயல் பட முடியாத சூழல் நிச்சயமாக உருவாகிவிடும்.
அனைத்தையும் தாண்டி படமானது தணிக்கை செய்யப்பட்ட பின்னரே வெளியிடப்படும் என்பதால் தணிக்கை குழு மீது நம்பிக்கை வைத்து இப்பொழுதே படத்தைப் பற்றி கருத்துகள் தெரிவித்துப் படைப்பாளிகளின் முயற்சியை தடுக்க வேண்டாம் என வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு சமக தலைவர் ரா.சரத்குமார் கூறி உள்ளார்.