நடிகர் பிருத்விராஜுக்கு கொரோனா படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைப்பு.

Malayalam actor Prithviraj tests positive for covid 19

by Nishanth, Oct 20, 2020, 13:10 PM IST

படப்பிடிப்புக்கு இடையே நடிகர் பிருத்விராஜ் மற்றும் டைரக்டருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் நடித்து வந்த ஜனகணமன என்ற படத்தின் படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டது.

மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் பிருத்விராஜ். இவர் நந்தனம் என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார். இதன் பின்னர் அகலெ, வர்கம், வாஸ்தவம், திரக்கத, புதியமுகம், இந்தியன் ருப்பி, பாவாடை, விமானம், ஐயப்பனும் கோஷியும் உள்பட ஏராளமான மலையாள படங்களில் நடித்துள்ளார். இவர் மோகன்லாலை வைத்து முதன்முதலாக இயக்கிய லூசிபர் என்ற படம் மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. தமிழில் கனா கண்டேன் என்ற படத்தின் மூலம் இவர் வில்லனாக அறிமுகமானார். இதன் பின்னர் பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, கண்ணாமூச்சி ஏனடா, ராவணன், காவியத்தலைவன், நினைத்தாலே இனிக்கும் உட்பட ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ளார். மலையாளம் தமிழ் தவிர தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் பிருத்விராஜ் நடித்துள்ளார்.

தற்போது இவர் ஜனகணமன என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தை டிஜோ ஜோஸ் ஆண்டனி என்பவர் இயக்கி வருகிறார். இது இவரது இரண்டாவது படமாகும். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களாக கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் வைத்து அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து நடந்த பரிசோதனையில் நடிகர் பிருத்விராஜுக்கும், டைரக்டர் டிஜோ ஜோஸ் ஆண்டனிக்கும் கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டது. படப்பிடிப்பில் கலந்துகொண்ட சக கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையே பிருத்விராஜ் ஆடு ஜீவிதம் என்ற படத்தில் நடிப்பதற்காக கடந்த மார்ச் மாதம் ஜோர்டான் நாட்டுக்கு சென்றார்.

அவருடன் டைரக்டர் பிளஸ்சி உள்பட மொத்தம் 52 கலைஞர்கள் அங்கு சென்றனர். ஜோர்டானில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தபோது தான் அங்கும் லாக் டவுன் அமல்படுத்தப்பட்டது. இதனால் பிருத்விராஜ் உள்பட படப்பிடிப்பு குழுவினர் அனைவருக்கும் நாடு திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஜோர்டானில் தவித்த அவர்கள் 3 மாதங்களுக்கு பின் மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் நடவடிக்கையின் பேரில் கடந்த மே மாதம் தனி விமானம் மூலம் டெல்லி வழியாக கொச்சிக்கு அழைத்து வரப்பட்டனர். இதன் பின்னர் 2 வாரம் பிருத்விராஜ் உள்பட படப்பிடிப்புக்கு சென்ற கலைஞர்கள் அனைவரும் தனிமையில் இருந்த பின்னரே அவர்களது வீடுகளுக்குச் சென்றனர். அப்போது நடத்தப்பட்ட பரிசோதனையில் ஜோர்டான் சென்ற 3 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அப்போது பிருத்விராஜுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.

You'r reading நடிகர் பிருத்விராஜுக்கு கொரோனா படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைப்பு. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை