விக்ரம் பிரபு நடித்த முதல் படம் 'கும்கி'. யானை மற்றும் விலங்குகளை வைத்து அப்படம் எடுக்க விலங்குகள் நல வாரியம் தடை இருந்த போதிலும் அவர்களிடம் அனுமதி பெற்று யானைக்கு எந்த தொந்தரவும் தராமல் படத்தில் நடிக்க வைத்தார் இயக்குனர் பிரபு சாலமன்.அடுத்து மீண்டும் யானையை வைத்து காடன் என்ற பெயரில் படம் இயக்கி உள்ளார். அதுவும் ஒரு மொழியல்ல தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இயக்கி உள்ளார்.யானைகளை வைத்து மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள 'காடன்' படத்தில் நடிப்பதற்காகத் தனது முழு உடலமைப்பை மாற்றி சிரத்தை எடுத்து நாயகனாக நடித்துள்ளார் ராணா.
ஈராஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் தினமும் 20 யானைகளை வைத்து முதற்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் 40 நாட்கள் நடைபெற்றது. பின்பு உன்னி என்ற யானையை வைத்து கேரளாவில் 60 நாட்கள் படப்பிடிப்பு நடை பெற்றது. பின்பு, புனேவில் உள்ள சதாரா, மும்பை பிலிம் சிட்டி, காரகர் எனத் தொடர்ந்து 70 நாட்கள் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர்.
பெரும் காடுகள், மலைகள் எனக் கஷ்டப்பட்டுப் பல காட்சிகளை படமாக்கியுள்ளது படக்குழு. அவை அனைத்துமே திரையரங்கில் பார்த்தால் மட்டுமே, அதன் பிரம்மாண்டம் தெரியும். திரையரங்கில் மட்டுமே வெளியாகும். இந்தப் படத்துக்காகக் காடுகளின் இயற்கை ஒலி படத்துக்கு முதுகெலும்பாக இருப்பதால் ஆஸ்கர் விருது வென்ற ரசூல் பூக்குட்டி 'காடன்' படத்துக்கு ஒலியை வடிவமைத்துள்ளார். 'பாகுபலி' படத்துக்குப் பிறகு ராணா 2 ஆண்டுகள் கால்ஷீட் கொடுத்து நடித்துள்ளார். விஷ்ணு விஷால் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் யானை பாகனாக நடித்துள்ளார். நாயகியாக ஜோயா நடித்துள்ளார்.
இந்தப் பிரம்மாண்ட தயாரிப்பை 2021-ம் ஆண்டு பொங்கல் வெளியீடாகத் திரைக்குக் கொண்டு வர ஈராஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் ஒரே சமயத்தில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.ஈராஸ் நிறுவனம் தயாரிக்கக் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் பிரபு சாலமன். அசோக் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.புவன் எடிட்டிங் கவனிக்கிறார். ஸ்டன்னர் சாம், ஸ்டண்ட் சிவா சண்டைக் காட்சிகள் அமைக்கிறார். மயூர் அரங்கம் நிர்மாணிக்கிறார். சாந்தனு மொய்த்ரா இசை அமைக்கிறார், (இவர் 3 இடியட்ஸ் படத்தின் இசையமைப்பாளர்)
நிகில் முருகன் பி.ஆர்.ஓ.