இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பற்றிய வாழ்க்கை படமாக உருவாகவிருந்த 800 படத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால் அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. பாரதி ராஜா, வைரமுத்து, பார்த்திபன், தாமரை, சீனு ராமசாமி உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இறுதியில் தன்னுடைய வாழ்க்கை படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகிக் கொள்ள முத்தையா முரளிதரனே கேட்டுக்கொண்டார். அவருக்கு நன்றி வணக்கம் சொல்லி விஜய் சேதுபதி 800 படத்திலிருந்து விலகினார்.
இதற்கிடையில் விஜய் சேதுபதி மகளைப் பற்றி ஒருவர் அவதூறாகப் பேசினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது, அந்த நபரைக் கைது செய்ய வேண்டும் என்று போலீசில் புகார் தரப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் தேடினர். அந்த நபர் இலங்கையைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது.தற்போது அந்த நபர் விஜய் சேதுபதியிடமும் அவரது மகளிடமும் மன்னிப்பு கேட்டு ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார்.
அதில் அவர் கூறியதாவது: டிவிட்டரில் விஜய் சேதுபதி பற்றியும் அவரது மகள் பற்றியும் தப்பாகப் பேசிய இலங்கையைச் சேர்ந்த தமிழன் நான்தான். என்னை மன்னிச்சிடுங்க. இதற்கு மன்னிப்பு கிடையாதுன்னு எனக்குத் தெரியும். ஏனென்றால் ஒரு குழந்தையைப் பற்றி ரொம்ப தப்பா பேசிட்டேன். என் வாழ்நாளில் அப்படி பேசினதில்ல. யாரையும் திட்டினது கூட இல்லை. நான் ஏன் அப்படிப்பேசினேன் என்று கேட்டால், இந்த கொரோனாவால் எனக்கு வேலை போய் விட்டது. இலங்கையில் நடந்த யுத்தத்தைப் பற்றி தெரிஞ்சும் இவ்வளவு சர்ச்சையான படத்தில், தெரிஞ்சும் நடிக்கிறாரே என்ற எல்லா தமிழர்களிடமும் இருக்கிற கோபத்தால்தான் நான் டிவிட் போட்டேன். இனி அந்த மாதிரி டிவிடெல்லாம் வாழ்க்கையில் பண்ணவே மாட்டேன். அதுக்காக உலக வாழ் தமிழர்களிடமும், விஜய் சேதுபதி அண்ணா உங்ககிட்டயும் உங்கள் மகள், என்தங்கச்சி மாதிரி பாப்பா அவங்ககிட்டயும் அவங்க மனைவிகிட்டேயும் நான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கிறேன். உங்க தம்பியா நினைச்சி என்னை மன்னிச்சி விட்ருங்க.
வாழ்க்கையில் இந்த மாதிரி தப்பை நான் பண்ணவே மாட்டேன். நான் செஞ்ச தப்புக்கு ஆண்டவன் தண்டனை கொடுத்தாலும் மிகப் பெரிய தண்டனையாத் தான் கிடைக்கும்.
விஜய்சேதுபதி, அவங்க மனைவி, மகள் மற்றும் தமிழக மக்கள் மட்டுமல்ல உலக தமிழ் மக்களிடமும் நான் தாழ்மையுடன் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனக்காக இல்லாவிட்டாலும் என்னை நம்பி ஒரு குடும்பமே இருக்கு.. என் தாய்க்காகவும் என் தம்பி, அப்பா சொந்தக்காரர்கலெல்லாம் இருக்கிறார்கள் .வெளியில் பெயர், முகம் தெரிந்தால் என் வாழ்க்கையே வீணா போய்விடும் இந்த தப்பை என் வாழ்க்கையில் நான் பண்ணவே மாட்டேன். விஜய்சேதுபதி அண்ணா நீங்கள், உங்கள் மகள் உங்க குடும்பம் எல்லாம் சேர்ந்து என்னை மன்னிச்சிடுங்க.
தமிழ் நடிகர்கள் ஊடகவியலாளர்கள் என்னைப் பற்றி அவதூறு பரப்புகிறார்கள். நான் அந்தமாதிரி கெட்ட எண்ணம் கொண்ட மனுஷன் இல்லை. ஏதோ மன நிலை பாதிக்கப்பட்டு வேலை கிடைக்காத ஒரு விரக்தியில் தான் இந்த மாதிரி தவறை பண்ணிட்டேன். என்னை உங்கள் உடன் பிறவா சகோதரனா நினைச்சி மன்னிச்சிடுங்க.
இவ்வாறு வீடியோவில் கூறி உள்ளார்.