நடிகை மிருதுளா முரளி திருமணம் கொச்சியில் இன்று நடந்தது.

by Nishanth, Oct 29, 2020, 19:27 PM IST

பிரபல மலையாள நடிகை மிருதுளா முரளி, நிதின் விஜயன் திருமணம் இன்று கொச்சியில் நடந்தது. கொரோனா நிபந்தனைகளைப் பின்பற்றி நடந்த இந்த திருமணத்தில் அவரது நெருங்கிய தோழிகளான நடிகைகள் பாவனா, ரம்யா நம்பீசன், சரண்யா மோகன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பள்ளியில் படிக்கும்போதே மலையாள தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை நடத்த தொடங்கியவர் மிருதுளா முரளி. இதன்பின்னர் சினிமாவுக்குள் நுழைந்த இவர், தமிழ், மலையாளம் மற்றும் இந்தி படங்களில் நடிக்க தொடங்கினார். தமிழ், மலையாள மொழிகளில் ஏராளமான விளம்பரப் படங்களிலும் இவர் நடித்துள்ளார். இவர் மலையாள நடிகையாக இருந்த போதிலும் 2007ல் 'கண்களும் கவிபாடுதே' என்ற தமிழ் படத்தில் தான் அறிமுகமானார். ஆனால் அந்தப் படம் தியேட்டரில் வெளியாகவில்லை. இதன் பின்னர் 2009ல் மோகன்லாலுடன் 'ரெட் சில்லீஸ்' என்ற மலையாள படத்தில் இவர் நடித்தார். தொடர்ந்து 'எல்சம்மா எந்ந ஆண் குட்டி', 'மணியறா', அயாள் ஞானல்ல', 'சிகாமணி' உள்பட ஏராளமான மலையாள படங்களில் நடித்தார். இதுதவிர 'நாகராஜசோழன் எம்ஏ எம்எல்ஏ', 'சிக்கினு சிக்கிக்கிச்சு', 'மணியார் குடும்பம்' ஆகிய தமிழ் படங்களிலும், 'ராக்தேஷ்' என்ற இந்தி படத்திலும் இவர் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை மிருதுளா முரளிக்கும் விளம்பரத் துறையில் பணிபுரிந்து வரும் நிதின் விஜயன் என்பவருக்கும் கடந்த டிசம்பரில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஏப்ரலில் இவர்களது திருமணம் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா பரவலை தொடர்ந்து திருமணம் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று கொச்சியில் வைத்து இவர்களது திருமணம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. கொச்சியில் உள்ள ஒரு மண்டபத்தில் வைத்து கொரோனா நிபந்தனைகளுடன் நடந்த திருமணத்தில் இருவரது நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் கலந்து கொண்டனர். மிருதுளா முரளியின் நெருங்கிய தோழிகளான நடிகைகள் பாவனா, ரம்யா நம்பீசன், ஷப்னா, சரண்யா மோகன், ஷில்பா பாலா, பாடகிகள் சயனோரா அமிர்தா சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன் என்று மிருதுளா முரளி கூறினார்.

You'r reading நடிகை மிருதுளா முரளி திருமணம் கொச்சியில் இன்று நடந்தது. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை