பாலியல் குற்றங்கள் அதிகரிக்க பெண்கள் தான் காரணமாம் சக்திமானின் சர்ச்சை கருத்து.

by Nishanth, Nov 1, 2020, 12:19 PM IST

இந்தியாவில் பாலியல் வன்முறைகள் அதிகரிப்பதற்கு பெண்கள் தான் காரணம். அவர்கள் வீட்டு சமையலறையில் இருந்தாலே போதும், எந்த பாலியல் குற்றங்களும் நடைபெறாது என்று பிரபல சக்திமான் நடிகர் முகேஷ் கன்னா கூறியதற்கு சமூக இணையதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த 20 வருடங்களுக்கு முன் தூர்தர்ஷனில் வெளியான சக்திமான் தொடரை இன்னும் யாரும் மறந்திருக்க முடியாது. பெரியவர்கள் மறந்தாலும் அப்போது குழந்தைகளாக இருந்தவர்கள் அந்த கேரக்டரை மறந்திருக்க மாட்டார்கள். 1997 முதல் 2005 வரை தூர்தர்ஷனில் இந்த சக்திமான் தொடர் ஒளிபரப்பானது. அந்த தொடரை பார்த்தால் தான் சாப்பிடுவேன் என்று அப்போது அடம்பிடித்த குழந்தைகளும் உண்டு. அந்த சூப்பர் பவர் கேரக்டரில் நடித்து பிரபலமானவர் முகேஷ் கன்னா.

இவர் தான் அந்த தொடரின் தயாரிப்பாளரும் ஆவார். அந்த தொடரில் சக்திமான் கேரக்டர் அணியும் உடையும் அந்த காலகட்டத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. கடைகளில் அந்த உடை மிக பரபரப்பாக விற்பனையானது. இந்நிலையில் நடிகர் முகேஷ் கன்னா ஒரு உள்ளூர் தொலைக் காட்சிக்கு பேட்டி அளித்தார். சமீபத்தில் பிரபலமான மீ டூ குறித்து கேட்டபோது முகேஷ் கன்னா கூறியது: முன்பெல்லாம் மீ டூ போன்ற எந்த பிரச்சினைகளும் கிடையாது. ஆண்களுக்கு இணையாக பெண்களும் வேலைக்கு போக செல்லத் தொடங்கிய பின்னர் தான் இந்த மீ டு பிரச்சனைகள் ஏற்பட தொடங்கியது. தங்களது வீட்டை பராமரிப்பது தான் பெண்களின் வேலையாகும். அவர்கள் சமையலறைகளில் தான் இருக்கவேண்டும். ஆண்களைப் போல பெண்களும் வெளியே சென்று வேலை பார்க்கத் தொடங்கிய பின்னர் தான் இதுபோன்ற பிரச்சினைகள் முளைக்க தொடங்கின.

ஆண்களுக்கு இணையாக தாங்களும் இருக்கவேண்டும் என்று நினைப்பது தான் இது போன்ற பிரச்சனைகளுக்கு எல்லாம் முக்கிய காரணமாகும் என்று கூறினார். நடிகர் முகேஷ் கன்னாவின் இந்த கருத்துக்கு சமூக இணையதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 'இவருக்கு மனநோய் பாதித்துவிட்டது, 'பெண்கள் வேலைக்கு போவதால் தான் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதாக இவர் கூறுகிறார். பெண்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டுமென்று என்பது தான் இவரது கருத்தாக இருக்கிறது. உங்களை நினைத்து நான் வெட்கப்படுகிறேன் முகேஷ் கன்னா' என்று ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். ''எனக்கு நல்லது எது கெட்டது என நன்றாக சிந்தித்து செயல்பட முடியும். என்னுடைய கணவருக்கு இருக்கும் எல்லா உரிமைகளும் எனக்கும் இருக்கிறது.

நான் மீண்டும் சமயலறைக்கு திரும்பிச் செல்ல விரும்பவில்லை' என்று இன்னொருவர் கருத்து தெரிவித்துள்ளார். இதேபோல ஏராளமானோர் முகேஷ் கன்னாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக இணையதளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஏற்கனவே நடிகர் முகேஷ் கன்னா பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹாவுக்கு எதிராக தெரிவித்த கருத்தும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அதிகம் படித்தவை