கேரளாவுக்கு 20 ஆயிரம் என் 95 முக கவசங்களை வழங்கிய நடிகர் ஷாருக்கான்

by Nishanth, Nov 11, 2020, 19:53 PM IST

கேரள அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தன்னுடைய அறக்கட்டளை மூலம் 20 ஆயிரம் என் 95 முக கவசங்களை இலவசமாக வழங்கி உள்ளார். அவருக்கு கேரள சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா நன்றி தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே கேரளாவில் தான் முதன்முதலாக கொரோனா நோய் பரவியது. சீனாவில் உள்ள வுஹானில் படித்து வந்த 3 மருத்துவ கல்லூரி மாணவர்கள் கேரளா திரும்பிய போது அவர்களுக்கு கொரோனோ இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் பின்னர் தீவிர சிகிச்சையின் பலனாக அவர்கள் குணமடைந்தனர். நோய் மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. ஆனால் இதன் பின்னர் இத்தாலியில் இருந்து கேரளா திரும்பிய சிலர் மூலம் நோய் மீண்டும் பரவத் தொடங்கியது. ஆனாலும் கேரள சுகாதாரத் துறையின் சிறப்பான நோய் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக அதிக அளவில் பரவாமல் கட்டுக்குள்ளேயே இருந்தது.

சிறப்பான கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைக்காக கேரள சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜாவுக்கு பல்வேறு நாடுகள் பாராட்டு தெரிவித்தன. கேரள அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பல்வேறு நாடுகளும், பிரபலங்களும் உதவி செய்து வருகின்றனர். சமீபத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன் கேரளா மற்றும் ஆந்திரா மாநிலங்களின் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்காக 1.5 கோடி உதவி வழங்கினார். இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கேரள அரசுக்கு 20 ஆயிரம் என் 95 முகக் கவசங்களை இலவசமாக வழங்கி உள்ளார். ஆசிட் தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு உதவுவதற்காக நடிகர் ஷாருக்கான் 'மீர்' என்ற பெயரில் ஒரு அறக்கட்டளை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளையின் மூலம் இவர் முகக் கவசங்களை வழங்கியுள்ளார். ஷாருக்கானின் இந்த உதவிக்கு கேரள சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா நன்றி தெரிவித்துள்ளார்.

You'r reading கேரளாவுக்கு 20 ஆயிரம் என் 95 முக கவசங்களை வழங்கிய நடிகர் ஷாருக்கான் Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை