பல சவால்கள் இணையத்தில் உலா வருகின்றன. அதில் சில மக்களுக்கும் நாட்டுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. அப்படியொரு ஒரு சவால் தான் கிரீன் இந்தியா சேலன்ஞ். அதன் படி மரக்கன்றுகளை நட்டு தனது நண்பர்களுக்கு அதைச் செய்யப் பரிந்துரைப்பது. கடந்த 3 மாதத்துக்கு முன் நடிகை சமந்தா கணவர் நாக சைதன்யா மரங்கள் நட்டு அதை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு பரிந்துரைத்தார். கடந்த 3 மாதமாக ஏற்காமலிருந்த ரகுல் தற்போது அதையேற்று நிறைவேற்றி இருக்கிறார். ஒன்றுக்கு 3 மரக்கன்றுகளை அவர் நட்டார்.
பிறகு அந்த சவாலைத் தனது ரசிகர்களுக்கு அவர் பரிந்துரைத்தார். ஒவ்வொரு ரசிகரும் 3 மரங்கள் நட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.அவர் கூறும்போது, நடிகர்களை அல்ல இந்த சவாலை நான் ரசிகர்களுக்கு வைக்கிறேன். தலா 3 மரங்கள் நட்டு நம்மைக் காக்கும் இந்த பூமிக்கு நன்றி செலுத்துவோம் என்றார்.பிரபலங்கள் இந்த சவாலை ஏற்றுக் கொண்டு வருகிறார்கள், மேலும் அவர்களது சகாக்கள் மற்றும் ரசிகர்கள் பலரை மரக்கன்றுகளை நடவு செய்யப் பரிந்துரைக்கின்றனர்.
முன்னதாக, நடிகர் விஜய் தனது பிறந்தநாளை முன்னிட்டு தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு முன்வைத்த சவாலை ஏற்றுக்கொண்டார். விஜய் அவர் மரக்கன்றுகளை நட்ட புகைப்படங்களை வெளியிட்டு, "இது உங்களுக்கானது மகேஷ்பாபுகாரு. இங்கே ஒரு பசுமையான இந்தியா மற்றும் நல்ல ஆரோக்கியம். நன்றி. ஸ்டேசேஃப் என தெரிவித்தார்.முன்னதாக, நடிகர் பிரகாஷ் ராஜ் இந்த சவாலை ஏற்றுக் கொண்டு மோகன்லால், சூர்யா, ரக்ஷித் ஷெட்டி, ரம்யா கிருஷ்ணன் மற்றும் த்ரிஷா ஆகியோரை பரிந்துரைத்தார்.சவாலை ஏற்றுக்கொண்ட த்ரிஷா, அவர் இரண்டு மரக் கன்றுகளை நட்ட படங்களை வெளியிட்டார்.
தனது சமூக ஊடக கணக்கில், "நான் கிரீன் சேலஞ்சை ஏற்றுக்கொண்டு இரண்டு மரக்கன்றுகளை நட்டேன். உங்கள் அனைவரையும் இதுபோல் செய்ய கேட்கிறேன். பசுமையான இந்தியாவை நோக்கிப் பயணிக்க உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்" ஆனால் அவர் யாரையும் பரிந்துரைக்கவில்லை. அதேபோல் ராஜமவுலியின் படக் குழு தங்களுக்கு வந்த கிரீன் இந்தியச் சவாலை ஏற்று ஒட்டு மொத்த படக்குழுவும் மரங்கள் நட்டது குறிப்பிடத்தக்கது.