நடிகை டாப்ஸி தமிழில் ஆடுகளம் படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு ஒரு சில படங்களில் நடித்தார். பிறகு தெலுங்கு படங்களில் நடிக்கச் சென்றார். இரண்டு மொழியிலும் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததால் பாலிவுட்டில் நடிக்கச் சென்றார். அங்கு வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்ததில் புகழ் பெற்றார்.அனுஷ்கா , நயன்தாரா, ஜோதிகா போல ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். சினிமாவுக்கு வந்த புதிதில் பல சிரமங்களை அவர் அனுபவித்ததாகப் பேட்டி அளித்திருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: ஒரு படத்தில் ஹீரோவின் அறிமுக காட்சியை விட என்னுடைய அறிமுக காட்சி நன்றாக இருக்கிறது என்று கோபப்பட்ட ஹீரோ அந்த அறிமுக காட்சியை நீக்கவைத்தார். என்னை ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தனர். ஆனால் அந்த ஹீரோ மனைவிக்கு என்னைப் பிடிக்கவில்லை. இதனால் அந்த படத்திலிருந்து இருந்து என்னை நீக்கி விட்டனர்.இப்படித்தான் இன்னொரு படத்தில் நான் பேசிய வசனம் நன்றாக இருக்கிறது தான் பேசும் வசனம் அவ்வளவு ஈர்ப்பாக இல்லை என்று டப்பிங் நேரத்தில் அந்த வசனத்தை மாற்றினார்கள்.
சம்பள விவகாரத்திலும் ஹீரோவின் தாக்கம் எனக்கு இருந்தது. குறிப்பிட்ட ஹீரோ நடித்த முந்தைய படம் சரியாக ஓடவில்லை என்பதால் எனது சம்பளத்தை குறைக்கச் சொன்னார்கள். தற்போது நான் எதையும் தாங்கும் இதயத்துக்குத் தயாராகிவிட்டேன். எனது நடிப்புத் திறமை பற்றி எனக்குத் தெரியும் என்னை வைத்து படம் இயக்கும் இயக்குனர்களும் அதை உணர்ந்துதான் கனமான வேடங்களில் நடிக்க வாய்ப்பு தருகிறார்கள்.
இவ்வாறு டாப்ஸி கூறினார்.