Wednesday, Jul 28, 2021

டி20 உலகக் கோப்பை போட்டியிலும் நடராஜனை சேர்க்க வேண்டும் முன்னாள் வீரர் கருத்து

by Nishanth Nov 18, 2020, 16:54 PM IST

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 அணியில் இடம் பெற்றுள்ள நடராஜனை அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை அணியிலும் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரரும், ஐபிஎல் ஐதராபாத் அணியின் ஆலோசகருமான விவிஎஸ் லட்சுமண் கூறி உள்ளார்.இந்திய கிரிக்கெட் அணி ஐபிஎல் முடிந்த கையோடு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

ஆஸ்திரேலிய அணியுடன் 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் தலா 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்தியா விளையாடுகிறது. நவம்பர் 27ம் தேதி சிட்னியில் நடைபெற உள்ள முதல் ஒருநாள் போட்டியுடன் இந்த போட்டித் தொடர் தொடங்குகிறது. தற்போது இந்திய வீரர்கள் அனைவரும் 14 நாள் சுய தனிமையில் உள்ளனர். வீரர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது. இதில் யாருக்கும் கொரோனா இல்லை எனத் தெரியவந்துள்ளது.

சுய தனிமையில் உள்ளபோதிலும் இந்திய வீரர்கள் பயிற்சி எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில தினங்களாக வீரர்கள் அனைவரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே ஆஸ்திரேலியாவுடன் மோத உள்ள இந்தியாவின் 3 அணிகளிலும் வீரர்கள் தேர்வில் தொடக்கத்தில் சில சர்ச்சைகள் ஏற்பட்டன.ரோகித் சர்மா நீக்கப்பட்டது, காயமடைந்திருந்த மாயங்க் அகர்வால் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டது உள்பட சில விவகாரங்களால் சர்ச்சை எழுந்தது. பின்னர் வீரர்கள் தேர்வில் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. இதன்படி ரோகித் சர்மா டெஸ்ட் அணியில் இடம் பிடித்தார். டி20 போட்டிகளில் ஆடி வரும் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் டெஸ்ட் அணியில் இடம் பெற்றது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இதேபோல ஐபிஎல்லில் ஐதராபாத் அணியில் ஆடிவரும் யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் என அழைக்கப்படும் தமிழக வீரர் நடராஜன் இந்திய அணியில் சேர்க்கப்பட்டதும் அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. கடந்த இரு வருடங்களுக்கு முன்பு தான் இவர் முதன் முதலாக ஐபிஎல் போட்டியில் விளையாடத் தொடங்கினார். அதிலும் இந்த சீசனில் தான் இவரது பந்துவீச்சு எடுபட்டது. அதற்குள் இந்திய அணியில் நடராஜன் இடம்பிடித்தது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.

ஆனால் இதில் எந்த வியப்பும் இல்லை என்று கூறுகிறார் இந்திய அணியின் முன்னாள் வீரரும், ஐதராபாத் அணியின் ஆலோசகருமான விவிஎஸ் லட்சுமண். இவர் மேலும் கூறியது: நடராஜ் ஒரு சிறப்பான பந்து வீச்சாளர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தற்போது இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 அணியில் இடம்பிடித்துள்ளார். ஆனால் அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டியிலும் அவரை சேர்க்க வேண்டும் என்பது தான் எனது விருப்பமாகும். தற்போது இந்திய டி20 அணியில் டெத் ஓவர்களில் சிறப்பாகப் பந்துவீச ஒருவர் தேவையாகும். முகமது ஷமி மற்றும் நவதீப் செய்னி ஆகியோர் சிறப்பாகப் பந்து வீசுகின்றனர் என்பதில் சந்தேகமில்லை. அது மிகவும் மகிழ்ச்சியான விஷயம் தான்.

ஆனால் அவர்கள் தவிர இந்திய அணிக்கு ஒரு துருப்புச் சீட்டு கண்டிப்பாகத் தேவை. அந்த துருப்புச் சீட்டு தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் நடராஜன். ஐபிஎல் போட்டியில் விராட் கோஹ்லியையும், எபி டிவில்லியர்சையும் சிறப்பான யார்க்கர்கள் மூலம் நடராஜன் ஆட்டமிழக்க வைத்தார். அவரது ஆயுதம் யார்க்கர் மட்டுமல்ல. ஐபிஎல் போட்டியில் தன்னுடைய கைவசமுள்ள பல திறமைகளை அவர் வெளிக்கொண்டு வரவில்லை. ஷார்ப் பவுன்சர், ஸ்லோ பால், ஆஃப் கட்டர் மற்றும் புதிய பந்தில் விக்கெட் எடுப்பதற்கான திறமை ஆகிய அனைத்துமே நடராஜனிடம் உண்டு என்று கூறுகிறார் லட்சுமண்.

You'r reading டி20 உலகக் கோப்பை போட்டியிலும் நடராஜனை சேர்க்க வேண்டும் முன்னாள் வீரர் கருத்து Originally posted on The Subeditor Tamil

READ MORE ABOUT :

More Sports News

அண்மைய செய்திகள்