நடிகை பலாத்கார வழக்கு சாட்சியை மிரட்டிய எம்எல்ஏவின் உதவியாளர் அதிரடி கைது

by Nishanth, Nov 24, 2020, 10:45 AM IST

பிரபல மலையாள நடிகை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சாட்சியை மிரட்டியதாகப் புகார் கூறப்பட்ட கேரள ஆளுங்கட்சி எம்எல்ஏ கணேஷ் குமாரின் உதவியாளர் பிரதீப் குமாரை இன்று போலீசார் கைது செய்தனர்.பிரபல மலையாள நடிகை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு எர்ணாகுளத்தில் உள்ள தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விசாரணை நீதிமன்றம் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாகப் பாதிக்கப்பட்ட நடிகையும், அரசுத் தரப்பு சார்பிலும் புகார் கூறப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து வேறு நீதிமன்றத்திற்கு விசாரணையை மாற்ற வேண்டும் என்று கோரி கேரள நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 2 வாரங்களுக்கு விசாரணையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த மனுவைக் கடந்த வாரம் விசாரித்த உயர்நீதிமன்றம், விசாரணையை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டிய தேவையில்லை என்றும் 23ஆம் தேதி (நேற்று) முதல் விசாரணையை மீண்டும் தொடங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று இந்த வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கியது. ஆனால் அரசுத் தரப்பில் இந்த வழக்கில் ஆஜராகி வந்த வழக்கறிஞர் சுரேசன் என்பவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தது நேற்று நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து விசாரணை 26ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது.இதற்கிடையே இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியான விபின்லால் என்பவர் காசர்கோடு போலீசில் கடந்த சில வாரங்களுக்கு முன் ஒரு புகார் செய்தார்.

அதில், இந்த வழக்கில் நடிகர் திலீப்புக்கு ஆதரவாக வாக்கு மூலம் அளிக்க வேண்டும் என்று கூறி ஒருவர் அடிக்கடி போன் மூலமும், கடிதம் மூலமும் தொந்தரவு செய்வதாகவும், திலீப்புக்கு ஆதரவாக வாக்கு மூலம் அளிக்காவிட்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டுவதாகவும் தெரிவித்திருந்தார். இதையடுத்து காசர்கோடு போலீசார் இந்த புகார் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இந்த விசாரணையில் விபின்லாலை மிரட்டியது கேரள ஆளுங்கட்சி எம்எல்ஏவான கணேஷ் குமாரின் அலுவலக உதவியாளர் பிரதீப் குமார் எனத் தெரியவந்தது. அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், கடந்த வாரம் விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி அவருக்கு நோட்டீஸ் அனுப்பினர். இதையடுத்து முன்ஜாமீன் கோரி பிரதீப் குமார் காசர்கோடு நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், விசாரணை அதிகாரி முன் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து பிரதீப் குமார் கடந்த சில நாட்களுக்கு முன் காசர்கோடு போலீசில் ஆஜரானார். அவரிடம் போலீசார் 5 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தினர். இந்நிலையில் பிரதீப் குமார் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சாட்சியை மிரட்டியது தொடர்பாக பிரதீப் குமாரைக் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டி இருப்பதால் அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், பிரதீப் குமாரின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து போலீசார் அவரை எந்த நேரத்திலும் கைது செய்யலாம் என்ற நிலை ஏற்பட்டது. இந்நிலையில் இன்று காலை கொல்லம் அருகே பத்தனாபுரத்திலுள்ள பிரதீப் குமாரின் வீட்டுக்குச் சென்ற போலீசார் அவரை அதிரடியாகக் கைது செய்தனர்.தொடர்ந்து கூடுதல் விசாரணை செய்வதற்காக அவரை போலீசார் காசர்கோட்டுக்கு கொண்டு சென்றனர். இந்த விசாரணையில் சாட்சியை மிரட்டியதின் பின்னணியில் செயல்பட்டது யார் என்பது குறித்த விவரங்கள் தெரிய வரும் எனக் கருதப்படுகிறது.

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்