நடிகர் திலீப்புக்கு சாதகமாக சாட்சி அளித்தால் ₹ 25 லட்சம், 5 சென்ட் நிலம் மேலும் ஒருவர் புகார்

by Nishanth, Nov 24, 2020, 14:02 PM IST

மலையாள நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் திலீப்புக்கும் சாதகமாக வாக்குமூலம் கொடுத்தால் ₹ 25 லட்சம் பணமும், 5 சென்ட் நிலமும் கிடைக்கும் என்று ஒருவர் தன்னிடம் கூறியதாக இந்த வழக்கில் சாட்சியான ஜின்சன் என்பவர் போலீசில் புகார் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல மலையாள நடிகை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு எர்ணாகுளத்தில் உள்ள தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி மாதம் இந்த தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இந்த நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட நடிகை மற்றும் சாட்சிகளிடம் விசாரணையும், குறுக்கு விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் போலீஸ் தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டிருந்த நடிகர் சித்திக், நடிகைகள் பாமா, பிந்து பணிக்கர் உள்பட சிலர் பல்டியடித்து பிறழ் சாட்சிகளாக மாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகர் திலீப் தான் இதற்கு காரணம் என்று மறைமுகமாக கூறப்பட்டு வருகிறது.

இதற்கிடையே சாட்சிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்பட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக காசர்கோட்டை சேர்ந்த விபின்லால் என்பவர் போலீசில் புகார் கொடுத்தார். திலீப்புக்கு சாதகமாக வாக்கு மூலம் கொடுக்காவிட்டால் தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டல் வந்தது என்று இவர் கூறியிருந்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் விபின்லாலுக்கு மிரட்டல் விடுத்தது கேரள ஆளுங்கட்சி எம்எல்ஏவான கணேஷ்குமாரின் உதவியாளர் பிரதீப்குமார் என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இன்று அவரை கைது செய்தனர்.இந்நிலையில் நடிகர் திலீப்புக்கு சாதகமாக சாட்சியமளிக்க கூறி தன்னை ஒருவர் நிர்ப்பந்தித்ததாகவும், பணம் மற்றும் நிலம் தருவதாகவும் தன்னிடம் கூறியதாக மேலும் ஒருவர் போலீசில் புகார் செய்துள்ளார்.

திருச்சூரைச் சேர்ந்த ஜின்சன் என்பவர் இந்த புகாரை கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பது: நடிகை பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான சுனில்குமாருடன் நானும் எர்ணாகுளம் சிறையில் இருந்தேன். அப்போது நடிகை பலாத்காரம் தொடர்பாக சில முக்கிய விவரங்களை அவர் என்னிடம் கூறினார். சிறையில் இருந்து விடுதலையான பின்னர் அந்த விவரங்களை நான் போலீசிடம் தெரிவித்தேன். இதையடுத்து போலீசார் என்னை சாட்சியாக இந்த வழக்கில் சேர்த்தனர். இந்நிலையில் என்னை இந்த வழக்கில் நடிகர் திலீப்புக்கு சாதகமாக வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என்று கூறி ஒருவர் போனில் என்னை அழைத்தார். திலீப்புக்கு சாதகமாக வாக்குமூலம் கொடுத்தால் 25 லட்சம் பணமும், 5 சென்ட் நிலமும் கிடைக்கும் என்று அவர் என்னிடம் கூறினார். ஆனால் வாக்குமூலத்தை மாற்ற முடியாது என்று நான் கூறிவிட்டேன். இவ்வாறு ஜின்சன் அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து திருச்சூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பலாத்கார வழக்கில் சாட்சிகளுக்கு தொடர்ந்து மிரட்டல் வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You'r reading நடிகர் திலீப்புக்கு சாதகமாக சாட்சி அளித்தால் ₹ 25 லட்சம், 5 சென்ட் நிலம் மேலும் ஒருவர் புகார் Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை