அமைச்சரின் இரவு விருந்துக்கு போகமறுப்பு.. பிரபல நடிகையின் படப்பிடிப்புக்கு தடை

by Nishanth, Nov 29, 2020, 17:05 PM IST

மத்திய பிரதேச மாநில அமைச்சரின் இரவு விருந்துக்கு செல்ல மறுத்ததால் பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலனின் படப்பிடிப்புக்கு வனத்துறை தடை விதித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் வித்யா பாலன். இவர் கடந்த 2003ல் பலோ தேகோ என்ற பெங்காலி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதன் பின்னர் பரிநீதா என்ற படம் மூலம் பாலிவுட்டில் இவர் காலடி எடுத்து வைத்தார். தொடர்ந்து மணிரத்தினத்தின் குரு, பூல் புலய்யா உட்பட ஏராளமான படங்களில் நடித்தார். சில்க் ஸ்மிதாவின் கதையான தி டர்ட்டி பிக்சர் என்ற படத்தின் மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் இவருக்கு கிடைத்தது.

தற்போது இவர் ஷெர்மி என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மத்திய பிரதேச மாநிலம் பால்காட் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக கடந்த இரு வாரங்களுக்கு முன்பு நடிகை வித்யா பாலன் அங்கு சென்றிருந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய பிரதேச மாநில அமைச்சர் விஜய் ஷா நடிகை வித்யா பாலனை இரவு விருந்துக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு அவர் மறுத்து விட்டதாக தெரிகிறது. இந்நிலையில் இன்று வனப்பகுதியில் படப்பிடிப்புக்கு சென்ற வாகனங்களை பால்காட் வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

இரண்டு வாகனங்கள் மட்டுமே வனப்பகுதிக்குள் செல்ல முடியும் என்று அவர்கள் கூறினர். இதனால் படப்பிடிப்பு குழுவினரால் வனப்பகுதிக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அமைச்சரின் இரவு விருந்துக்கு நடிகை வித்யா பாலன் செல்ல மறுத்ததால் தான் படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதை அமைச்சர் விஜய் ஷா மறுத்துள்ளார். படப்பிடிப்புக்கு அனுமதி கேட்பதற்காக படக்குழுவினர் என்னை அணுகினர். அவர்கள் தான் இரவு விருந்துக்கு என்னை அழைத்தனர். நான் மகாராஷ்டிரா வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டேன். படப்பிடிப்பை நிறுத்த நான் உத்தரவிடவில்லை என்று கூறினார்.

You'r reading அமைச்சரின் இரவு விருந்துக்கு போகமறுப்பு.. பிரபல நடிகையின் படப்பிடிப்புக்கு தடை Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை