சுந்தர் சி படத்திலிருந்து வெளியில் வந்த ஹீரோ..

by Chandru, Dec 15, 2020, 18:17 PM IST

சில பல ஹீரோ, ஹீரோயின்கள் டிவியிலிருந்து சினிமாவுக்கு வந்திருக்கிறார்கள். யூடியுபிலிருந்து சினிமாவுக்கு வந்தவர் ஹிப்ஹாப் ஆதி. மீசையை முறுக்கு என்ற முதல் படமே இயக்குனர் சுந்தர்.சி தயாரித்தார், அடுத்த ஆதி நடித்த நட்பே துணை, நான் சிரித்தால் என இரண்டு படங்களையும் சுந்தர்.சி தயாரிப்புலேயே நடித்திருக்கிறார். தற்போது மற்றொரு பெரிய பட நிறுவனத்தில் இணைந்திருக்கிறார் ஆதி.

மிகச்சிறந்த குடும்ப திரைப் படங்கள் மற்றும் தரமான கதைகளை வெற்றி திரைப் படங்களாகத் தொடர்ந்து தந்து, தமிழ் சினிமாவில் பலதலை முறைகளாக மிகப்பெரும் நடிகர்களுடன், எம் ஜி ஆர் துவங்கி சூப்பர் ஸ்டார் ரஜினி, அஜீத்குமார், தனுஷ் வரையில் பயணித்து, மிகப்பெரும் ஹிட் படங்கள் தந்து தனக்கென தனித்த பெயரைப் பெற்றுள்ளது சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம். தற்போது இந்நிறுவனம் வளர்ந்து வரும் இளம் தலைமுறை நடிகரான நடிகர் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் “அன்பறிவு” படத்தைத் தயாரிக்கிறது. புதுமுக இயக்குநர் அஷ்வின் ராம் இப்படத்தினை இயக்குகிறார்.

படம் பற்றி தயாரிப்பாளர் டி.ஜி. தியாகராஜன் கூறியதாவது: சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் எப்போதும் குடும்பங்கள் கொண்டாடும் படைப்புகளை, தருவதை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு இயங்கி வருகிறது. அப்படைப்புகள் எப்போதும் எங்களுக்கு மிகப்பெரும் பாராட்டையும், வரவேற்பையும் ரசிகர்களிடம் பெற்றுத் தந்துள்ளது. எங்களுக்குக் குவியும் பாராட்டுக்கள், மேலும் அழகான படைப்புகளைத் தர பெரும் ஊக்கமாக உள்ளது. நடிகர் ஆதி நடிப்பில் எங்களது அடுத்த படைப்பான “அன்பறிவு” படத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். மிகக் குறுகிய திரைப் பயணத்தில் குடும்பங்களுக்குப் பிடித்த நடிகராக ஹிப்ஹாப் ஆதி மாறியிருக்கிறார். அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதைகள் அவரை உலகளாவிய ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் மாற்றியிருக்கிறது. விநியோக களத்திலும் மிக நல்ல பெயர் பெற்றிருக்கிறார்.

“அன்பறிவு” படம் அவரை தமிழகத்தின் அனைத்து குடும்பங்களிலும் கொண்டு சேர்க்கும், இப்படம் அவரது திரை வாழ்வில் மிக முக்கிய திருப்புமுனையாக இருக்கும். இயக்குநர் அஷ்வின் ராம் முதன்முதலாகத் திரைக்கதையைக் கூறியபோது எனக்கு பெரும் ஆச்சரியம் அளித்தது. கதையில் குடும்பங்கள் ரசிக்கும் அனைத்து அம்சங்களும் சரிவிகிதத்தில் கலந்திருந்தது. தரமான கதையும் அதனோடு கமர்ஷியல் அம்சங்களும் நிறைந்திருந்தது. நடிகர் நெப்போலியன் இப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம், இப்படத்திற்காக அவர் இங்கு வருவார் என நாங்கள் எதிர் பார்க்கவில்லை. ஆனால் அவர் கதாபாத்திரத்தை கேட்டவுடன் எங்களை ஆச்சர்யப்படுத்தும் வகையில் அமெரிக்காவில் இருந்து சென்னை பறந்து வந்து, முழுக் கதையையும் கேட்டு சம்மதம் சொன்னார்.

படத்தைச் சுற்றி மிக நல்ல விஷயங்கள் தொடர்ந்து நடக்கிறது சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தில் இப்படம் மிகப்பெரும் வெற்றியைப் பெறுமென நம்புகிறோம். இயக்குநர் அஷ்வின் ராம் கூறியதாவது: மிகப்பெரும் நிறுவனமான சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் மூலம் எனது முதல் படம் உருவாவது மிகப்பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. நான் ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். தமிழ் சினிமாவில் பல்லாண்டுகளாக, தொடர்ந்து குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படங்களை தந்து வருகிறது சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம். அந்நிறுவனத்தின் தயாரிப்பில் “அன்பறிவு” திரைப்படம் உருவாவது எனது அதிர்ஷ்டமே. இப்படம் நகைச்சுவை அம்சங்களும், உறவுகளிடையேயான உணர்வுகளையும் கமர்ஷியல் அம்சத்துடன் கலந்து சொல்லும். இந்நேரத்தில் கதையைக் கேட்டு இப்படத்தைத் தயாரிக்க ஒத்து கொண்ட தயாரிப்பாளர் டி.ஜி. தியாகராஜன், அர்ஜீன் தியாக ராஜன் மற்றும் செந்தில் தியாக ராஜன் ஆகியோருக்கு நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். நடிகர் ஹிப்ஹாப் ஆதி ஏற்கும் கதாபாத்திரம் அனைத்து வயதினரையும் கவரும் இப்படம் அவர் வாழ்வில் மிக முக்கிய திருப்புமுனையாக இருக்கும். இவ்வாறு இயக்குனர் கூறினார்.

“சிவப்பு மஞ்சள் பச்சை” படப்புகழ் நாயகி காஷ்மீரா இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். நடிகர் விதார்த் திருப்புனை ஏற்படுத்தும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். வித்தியாசமான கதைக்களங்களைத் தேடி நடிக்கும் நடிகர் விதார்த்தின் திரைப்பயணத்தில் மற்றுமொரு மகுடமாக இருக்கும். சாய்குமார், ஊர்வசி, விஜய் டீவி தீனா, சங்கீதா மற்றும் பல முக்கிய நடிகர்களும் இப்படத்தில் நடிக்கின்றனர். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் இ. ராகவ் படத் தொகுப்பு செய்கிறார். பொன் பார்த்திபன் எழுத்து பணியைச் செய்துள்ளார். ஸ்டண்ட் பணியை தினேஷ் சுப்பராயன் செய்ய, எஸ் எஸ். மூர்த்தி கலை இயக்கம் செய்துள்ளார். பூர்ணிமா ராமசாமி உடை வடிவமைப்பு செய்துள்ளார். ஜி.சரவணன், சாய் சித்தார்த் இணை தயாரிப்பு செய்துள்ளனர்.

You'r reading சுந்தர் சி படத்திலிருந்து வெளியில் வந்த ஹீரோ.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை