நடிகர் ஆர் மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் அமேசான் ஒரிஜினல் தயாரிப்பான 'மாறா'. இதன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.அமேசான் ஒரிஜினல் தயாரிப்பான மாறா ஜனவரி 8, 2021 சர்வதேச வெளியீடாக அமேசான் ப்ரைம் வீடியோவில் பிரத்யேகமாக வெளியாகிறது. தென்னிந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ஆர் மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப் படத்தில் ஷிவதா, மௌலி, அலெக்ஸாண்டர் பாபு, எம்.எஸ்.பாஸ்கர், குரு சோமசுந்தரம், கிஷோர் மற்றும் அபிராமி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்திங் களில் நடித்திருக்கின்றனர்.
திலீப் குமார் இயக்கத்தில் பிரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஷ்ருதி நல்லப்பா இணைந்து, பிரமோத் ஃபிலிம்ஸ் சார்பாகத் தயாரிக்கின்றனர். தான் குழந்தையாய் இருக்கும் போது, கடலோர நகரம் ஒன்றின் சுவரில் வரையப் பட்ட ஓவியத்தை வைத்து அந்நியர் ஒருவர் சொன்ன கதையைக் கேட்கிறாள் பாரு. அவள் வளர்ந்த பின் அந்த ஓவியத்தை வரைந்த மாறாவைத் தேடிச் செல்லும் காதலும் இசையும் கலந்த அழகான பயணம் தான் இந்தக் கதை.

இந்தப் படம் பற்றி சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருக்கும் அமேசான் ப்ரைம் வீடியோ தளம், "மேடியின் (மாதவன்) மீதிருக்கும் காதல் அளவுக்கு இந்த அதிசயக் கதையின் மீது நாங்கள் ஏற்கனவே காதல் கொண்டுவிட்டோம், ஜனவரி 8, 2021 அன்று மாறாவை ப்ரைமில் சந்தியுங்கள்" என்று பகிர்ந்துள்ளது. இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். கார்த்திக் முத்துக்குமார் மற்றும் தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவைக் கவனித்திருக்கின்றனர், புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்புச் செய்திருக்கிறார்.மாதவன் ஏற்கனவே இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்கு நடித்தும் வருகிறார். இதன் பெரும்பகுதி முடிந்திருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி,கன்னடம், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கிறது. இப்படத்துக்கு வெளிநாட்டிலிருந்து சிம்பொனி இசைக் குழுவை அழைத்து வந்து இசை அமைத்தார்.














