நடிகர் விஜயகாந்த் தமிழில் முதல் படம் முதல் இன்று வரை ஹீரோவாகவே நடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக உடல் நல பாதிப்பால் சினிமாவிலிருந்து ஒதுங்கி இருக்கிறார். தேமுதிக கட்சி தொடங்கி அதன் நிறுவனத் தலைவராக இருக்கிறார்.விஜயகாந்த்தின் இடத்தை நிரப்ப இதுவரை எந்த நடிகராலும் முடியவில்லை. விஜயகாந்த்துக்கு இரண்டு மகன்கள். விஜய் பிரபாகரன் மூத்த மகன், சண்முக பாண்டியன் இளைய மகன்.
சண்முக பாண்டியன் ஏற்கனவே சகாப்தம் என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அடுத்து மதுரவீரன் படத்தில் நடித்தார். தற்போது மித்ரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். விஜய் பிரபாகரன் அப்பா,அம்மா வழியில் அரசியலில் ஈடுபட்டார். அவரையும் திரைப்படத்தில் நடிக்கச் சொல்லி சிலர் கேட்டு வந்தனர். தற்போது அவரும் நடிகர் ஆகும் முடிவுக்கு வந்திருக்கிறார். முதல் கட்ட மாக அவர் உடல் எடையைக் குறைத்து ஒல்லியாகி இருக்கிறார். மேலும் சினிமா ஹீரோவுக்கு தேவையான பயிற்சிகளும் எடுத்துள்ளார்.
சமீபத்தில் அவரே சொந்த குரலில் பாடி நடித்த என் உயிர் தோழா என்ற பாடல் வீடியோவை வெளியிட்டார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது விஜய் பிரபாகரன் கதைகள் கேட்டு வருகிறார். தனக்கேற்ற கதை கிடைத்தவுடன் நடிக்க ஓ கே சொல்லி விடுவாராம். விஜயகாந்த் வீட்டிலிருந்து தற்போது திரையுலகுக்கு இரண்டு நடிகர்கள் கிடைத்திருக்கின்றனர். ஏற்கனவே சிவகுமார் மகன்கள் சூர்யா, கார்த்தி, தியாக ராஜன் மகன் பிரசாந்த், விஜய குமார் மகன் அருண் விஜய், வனிதா,கே.பாக்யராஜ் மகன் சாந்தனு, பாண்டி ராஜன் மகன் ப்ரித்வி, தம்பி ராமையா மகன் உமாபதி, மயில்சாமி மகன் அன்பு பல நடிகர்கள் ஹீரோக்களாக வலம் வந்துக் கொண்டிருக்கின்றனர். அந்த பட்டியலில் தற்போது விஜயகாந்த் மகன் விஜய் பிரபாகரனும் இணைந்துள்ளார்.