கொரோனா காலகட்டத்தில் தமிழ் திரையுலகம் 8 மாதமாக முடங்கியது. படப்பிடிப்புகள், சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட சினிமா பணிகள் எதுவும் நடக்கவில்லை. ஊரடங்கு தளர்வில் சினிமா படப்பிடிப்புக்குக் கட்டுப்பாடுடன் அனுமதி வழங்கப்பட்டது. அதேபோல் கடந்த நவம்பர் மாதம் தியேட்டர்கள் 50 சதவீத டிக்கெட் அனுமதியுடனும் மற்றும் கொரோனா விதிமுறை கட்டுப்பாடுகளுடனும் அனுமதி வழங்கப்பட்டது.பெரிய படங்கள் அல்லாமல் சிறிய பட்ஜெட் படங்கள் மட்டும் ரிலீஸ் ஆகிவருகிறது.பொங்கல் தினத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் மற்றும் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படங்கள் வெளியாக உள்ளன.
இதன்மூலம் சினிமா தியேட்டருக்கு கொரோனா அச்சத்தால் வராமல் தவிர்க்கும் ரசிகர்கள் கூட்டம் வரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. பொங்கல் தினத்தில் மாஸ்டர், ஈஸ்வரன் படங்களை ரிலீஸ் செய்ய தியேட்டர் அதிபர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.இந்நிலையில் திரையுலகுக்கு ஆந்திரா தெலங்கானா மாநிலங்கள் அளித்திருப்பது போல் மறுவாழ்வு சலுகை அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை கடிதம் அனுப்பி உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு திரைப் படத் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் டி.ராஜேந்தர் முதல்வருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:அண்டை மாநிலங்களாக தெலங்கானா மற்றும் ஆந்திரா மாநிலத்தில் கலைத்துறை மற்றும் திரைத்துறை தற்போது சந்தித்து வரும் இன்னல்களைக் கருத்தில் கொண்டு சிறப்பான பல திட்டங்களை அறிவித்துள்ளது. சினிமா மறுவாழ்வு பெறுவதற்காக ரிஸ்டார்ட் பேக்கேஜ் டு ஃபிலிம் இண்டஸ்ட்ரி என்ற ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது. அந்த திட்டம் அந்த மாநிலத்தில் பல்வேறு வகையில் திரைத்துறை மற்றும் கலைத் துறை பொலிவு பெறும் வகையில் உள்ளது. தமிழ் நாட்டில் தமிழ்த் திரைப்படத் துறை ஆதாலபாதாளத்தில் சிக்கிப் பல இன்னல்களைச் சந்தித்து வருகிறது.இதை கருத்தில் கொண்டு எவ்வாறு ஆந்திர அரசும் தெலங்கானா அரசும் பல்வேறு நலத் திட்டங்களை வழங்கியதுபோல் தமிழக அரசும் பல்வேறு சூழ்நிலைகளில் தமிழக திரைப்படத்துறைக்குப் பக்கபலமாக இருந்து பல்வேறு உதவிகளைச் செய்துள்ளது. அதனை யாரும் மறுக்க முடியாது.
அதே வேளையில் இதுபோன்ற இந்த பேரிடர் காலகட்டத்தில் பல இன்னல்களைச் சந்தித்து வருவது அனைவரும் அறிந்ததே. ஆகையால் தயவு கூர்ந்து இதனைக் கருத்தில் கொண்டு அண்டை மாநிலங்கள் வழங்கிய திட்டங்களை விடக் குறிப்பாக எல்பிடி (லோக்கால் பாடி டேக்ஸ்) முழுமையாக ரத்து செய்தல் போன்ற சிறப்பான சலுகைகளைத் தமிழ் திரைப்படத்துறைக்கு வழங்கி வாழ்வில் புது பொலிவடைய வழிவகை செய்யுமாறு தமிழ்த் திரைப்படத் துறை சார்பாக அன்புடன் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு டி.ராஜேந்தர் கூறி உள்ளார். கடந்த மாதம் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல் கடந்த மாதம் நடந்தது, அதில் என்.முரளி, டி.ராஜேந்தர், பி.எல்,தேனப்பன் தலைமையிலான அணிகள் போட்டியிட்டன. இதில் என்.முரளி தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் டி.ராஜேந்தர் தனது அணியினர் மற்றும் குறிப்பிட்ட தயாரிப்பாளர்களுடன் இணைந்து தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற புதிய அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார்.