பிரபல இந்தி மற்றும் மலையாள சினிமா டைரக்டரான சங்கீத் சிவன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள அவருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மலையாளம், இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் ஒரு காலத்தில் கேமராமேன் மற்றும் தயாரிப்பாளராக புகழ்பெற்றவர் சிவன். இவரது மகன்களான சங்கீத் சிவன், சந்தோஷ் சிவன் மற்றும் சஞ்சீவ் சிவன் ஆகிய 3 பேரும் மலையாளம், இந்தி, தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் கதை, இயக்கம், கேமரா, தயாரிப்பு ஆகிய துறைகளில் சிறந்து விளங்குபவர்கள் ஆவர்.
சந்தோஷ் சிவன் தமிழில் தளபதி, ரோஜா, இந்திரா, இருவர் உள்பட பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார். சங்கீத் சிவன் இந்தியில் தான் முதலில் கால் பதித்தார். 1989ல் அமீர்கான் நடிப்பில் ராக் என்ற படத்தை தயாரித்தார். இதன் பின்னர் மலையாளத்தில் வியூகம், யோதா, டாடி, கந்தர்வம், நிர்ணயம் உள்பட ஏராளமான படங்களை இயக்கியுள்ளார். பல மலையாள படங்களுக்கு கதை எழுதியுள்ளார். சில மலையாள படங்களை தயாரித்தும் உள்ளார். சங்கீத் சிவன் குடும்பத்துடன் திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இவருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது சங்கீத் சிவனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தித் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.