Friday, Apr 23, 2021

தியேட்டர்களில் 100 சதவீதம் டிக்கெட் அனுமதி வேண்டும்.. மாயத்திரை பட விழாவில் குஷ்பு குரல்..

by Chandru Jan 1, 2021, 14:41 PM IST

தமிழ் திரையுலகின் 2021ம் ஆண்டின் முதல் விழாவாக இன்று காலை மாயத்திரை படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் நடந்தது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் முரளி ராமசாமி தலைமை தாங்கினார். செயலாளர் ராதாகிருஷ்ணன், துணை தலைவர் கதிரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நடிகை குஷ்பு ஆடியோவை வெளியிட நடிகை சுஹாசினி பெற்றுக் கொண்டார். பின்னர் குஷ்பு பேசியதாவது: திரையுலகுக்கு நான் வந்து 33 வருடங்கள் ஆகிவிட்டது. எங்களை இயக்குனர்கள் படங்களில் அறிமுகப்படுத்தும்போது கொண்டாட்டமாக அறிமுகப்படுத்துவார்கள். எங்களுடன் நடித்த நடிகர்கள், பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் அவ்வளவு கண்ணியமானவர்களாக இருந்தனர். நடிகைகளுக்கு கண்ணியம் குறையாமல் பாதுகாப்பு அரணாக திகழ்ந்தார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் இப்படத்தின் தயாரிப்பாளர் சாய்பாபு.

எனது முதல் படத்திலிருந்து இவர்தான் எனக்கு காஸ்டியூம் டிசைனர். எனது திருமண சேலையும் இவர் தான் வடிவமைத்தார். இவர் காஸ்டியூம் டிசைனராக இருந்து இன்றைக்கு தயாரிப்பாளராகி இருக்கிறார். இப்படம் அவருக்கு வெற்றிப்படமாக அமைந்து அவர் தொடர்ந்து படங்கள் தயாரிக்க வேண்டும். சினிமாவில் உள்ள எங்களை போன்றவர்களுக்கு அதில் சம்பாதிக்கும் பணத்தை சினிமாவிலேயே தான் முதலீடு செய்யத் தெரியும். வேறு தொழில் செய்யத் தெரியாது. தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக முரளி ராமசாமி தேர்வாகி இருக்கிறார். சிறிய படங்கள், மீடியம் பட்ஜெட் படங்கள் பெரிய படங்கள் என மூன்று பிரிவிகளில் படங்கள் தயாராகிறது. சிறிய படங்களுக்கு சங்க தலைவர் என்ற முறையில் பல உதவிகளை செய்து தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இன்னொரு கோரிக்கையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வைத்துக் கொள்கிறேன்.

திரையுலகிற்கு 100 சதவீத டிக்கெட் அனுமதிக்க அரசு அனுமதி தர வேண்டும். டாஸ்மாக் கடைகளுக்கு 100 சதவீதம் அனுமதி இருக்கிறது. சினிமாவுக்கும் 100 சதவீதம் அனுமதி தர வேண்டும். இவ்வாறு குஷ்பு பேசினார். விழாவில் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் என்.முரளி ராமசாமி, செயலாளர் ராதா கிருஷ்ணன், துணை தலைவர் கதிரேசன் ஆகியோர் பேசும் போது. இந்த புத்தாண்டு முதல் தமிழ் சினிமாவுக்கு நல்ல ஆண்டாக அமைய வேண்டும். சிறுபட தயாரிப்பாளர்களுக்கு எவ்வளவு நன்மை செய்ய முடியுமோ அவ்வள வையும் எங்கள் நிர்வாகம் செய்யும். விபிஎஃப் என்ற கட்டணமத்தை முற்றிலுமாக ரத்து செய்திருக்கிறோம். அதற்கு பதிலாக சிறிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது; என்றனர். நிகழ்ச்சியில் மாயத்திரை ஹீரோ அசோக், நடிகை ஷீலா ராஜ்குமார், தயாரிப்பாளர் வி.சாய்பாபு, இயக்குனர் டி.சம்பத்குமார், ஒளிப்பதிவாளர் இளையராஜா வேலு சாமி. இசை அமைப்பாளர் எஸ்.என்.அருணகிரி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

You'r reading தியேட்டர்களில் 100 சதவீதம் டிக்கெட் அனுமதி வேண்டும்.. மாயத்திரை பட விழாவில் குஷ்பு குரல்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை