ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என சினிமாவுலகமே இணைய தளத்தில் மூழ்கி இருக்கிறது. டிவிட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்றவற்றில் கணக்குகள் ஆரம்பித்து தங்களது அன்றாட நிகழ்வுகள், புதிய பட அறிவிப்பு, ரசிகர்களிடம் உரையாடல், கவர்ச்சி படங்கள் எனப் பல விஷயங்களைப் பகிர்ந்து வருகின்றனர். சில நடிகைகளின் கணக்கைக் கோடிகள் மற்றும் பல லட்சம் பேர்கள் பின்தொடர்கின்றனர். அந்த வகையில் பிரபல நடிகை தீபிகா படுகோனே இன்ஸ்டாகிராம் கணக்கை 52.5 மில்லியன் பேர் அதாவது 5 கோடிக்கும் அதிகமானவர்கள் பின்பற்றுகின்றனர்.
நேற்று 2020 முடிந்து 2021 புத்தாண்டு பிறந்தது. பல நட்சத்திரங்கள் தங்களது ரசிகர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்தும் கடந்த ஆண்டின் கொரோனா பரவல் போல் இல்லாமல் இந்த ஆண்டு நல்ல ஆண்டாக இருக்க வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்தனர். ஆனால் தீபிகா படுகோனே தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிட்டிருந்த எல்லா போஸ்ட்களையும் மற்றும் படங்களையும் அழித்துவிட்டு ஜீரோ போஸ்ட்டுக்கு வைத்திருந்தார். அதைக் கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தீபிகா இன்ஸ்டா கணக்கை யாரோ ஹேக் செய்துவிட்டார்கள் என்று எண்ணினார்.
ஆனால் அவை அனைத்தையும் தீபிகாவே டெலிட் செய்திருக்கிறார் என்பது தெரிந்தது. அதே போல் தனது டிவிட்டர் கணக்கிலிருந்த போஸ்ட்களையும் டெலிட் செய்திருந்தார்.இந்த பதிவுகள் பலவற்றில் லட்சக் கணக்கானவர்கள் லைக் கொடுத்த மெசேஜ்கள், படங் கள் உள்ளடங்கி இருந்தன. கடந்த ஆண்டின் சோகங்கள் இந்த ஆண்டு மறக்க வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக அவர் இப்படிச் செய்திருக்கலாம் எனத் தெரிகிறது.கொரோனா வைரஸ் முற்றிலுமாக மக்கள் மற்றும் நட்சத்திரங்களின் வாழ்கையைப் புரட்டிப் போட்டு ஸ்தம்பிக்க வைத்தது ஒருபுறமிருந்தாலும் இந்தி நடிகர்கள் ரிஷிகபூர், இர்பான் கான், சுஷாந்த் சிங் போன்ற பிரபலங்களின் மரணம் தாங்கமுடியாத துயரத்தை அளித்தது. அமிதாப்பச்சன் முதல் ஐஸ்வர்யாராய் குழந்தை ஆராத்யா வரை குடும்பமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். எல்லாவற்றுக்கும் மேலாக பத்மாவதி படத்தில் தீபிகா நடித்தபோது அவர் வெளியிட்ட சில கருத்துக்களுக்கு சில அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சுஷாந்த் சிங் வழக்கு தொடர்பான போதை மருந்து வழக்கில் தீபிகா பெயர் இடம்பெற்று போலீ ஸார் அழைத்து விசாரித்தனர். இதுபோன்ற பல சம்பவங்களை அவர் இதற்கு முன் எதிர்கொண்டதில்லை. 2020ம் ஆண்டு அவருக்கு மறக்க வேண்டிய ஆண்டாக அமைந்தது. இதனால் தான் அவர் தனது சமூக வலைத் தள பக்கத்தில் வெளியிட்டிருந்த எல்லா பதிவுகளையும் டெலிட் செய்வதற்கு காரணமாகப் பார்க்கப்படுகிறது. புத்தாண்டில் அவர் ஆடியோ பதிவை முதல் போஸ்டாக வெளியிட்டுள்ளார். அதில் 2020ம் ஆண்டின் நிகழ்வு பற்றித் தெரிவித்திருப்பதுடன் 2021ம் ஆண்டிற்கு வாழ்த்து தெரிவித்து குரல் பதிவு மூலம் ஆடியோ டைரியில் மெசேஜ் பதிவு செய்திருக்கிறார்.