நீண்ட நாளுக்கு பிறகு காதல் படத்தில் நடிக்கும் ஹீரோ.. புதிய அனுபவம் பகிர்ந்தார்..

by Chandru, Jan 2, 2021, 14:05 PM IST

மணிரத்னம் இயக்கிய அலை பாயுதே படத்தில் காதல் இளவட்டமாக அறிமுகமாகித் தொடர்ந்து பல படங்களில் காதல் நாயகனாக நடித்து வந்தவர் ஆர்.மாதவன். கடந்த சில ஆண்டுகளாக இறுதிச் சுற்று, விக்ரம் வேதா போன்ற பல படங்களில் மாறுபட்ட வேடங்களை ஏற்று நடித்து வருகிறார். தற்போது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை படத்தை நடித்து இயக்கி வருகிறார். இதற்கிடையில் அவர், மாறா படத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு காதல் நாயகனாக நடித்திருக்கிறார்.அமேசான் ப்ரைம் வீடியோவில் வரவிருக்கும் தமிழ்த் திரைப்படமான மாறா படத்தின் ட்ரெய்லர் வரவேற்பு பெற்றது.

இப்படத்தின் மூலம் காதல் படங்களுக்குத் திரும்பி இருக்கிறார் மாதவன். மீண்டும் அவரை காதல் நாயகனாக பார்க்க ரசிகர்கள் எவ்வளவு ஆவலாக உள்ளனர் என்பது இப்படத்தின் ட்ரெய்லருக்கு கிடைத்த வரவேற்பே உதாரணம்.ஆர்.மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் இந்த தமிழ் காதல் மியூசிக்கல் படத்தின் ட்ரெய்லர் கடந்த டிசம்பர் 29 அன்று வெளியாகி, அதிக விரும்பப்பட்ட ட்ரெய்லர்களில் ஒன்றாக மாறியுள்ளது. மேலும் அனைவரது இதயங்களையும் வென்று பாராட்டுக்களையும் குவித்து வருகிறது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு காதல் படத்தில் நடிப்பது குறித்து மாதவன் கூறியதாவது: நீண்ட காலத்துக்குப் பின் நான் ஒரு காதல் படத்தில் நடிக்கிறேன். என்னால் காதல் காட்சிகளில் நடிக்க முடியுமா என்ற பயம் எனக்கு இருந்தது. ஒரு வருடத்துக்கு இரண்டு படங்கள் தான் நடிக்கிறேன். ஒரு படத்தின் கதை சரியில்லை என்று என் மனதுக்குப்பட்டால் அந்தப் படத்தில் நடிக்க மாட்டேன். மோசமான படங்கள் நடிக்கக் கூடாது என்பது தான் என் நோக்கம் என்றார்.பார்வையாளர்களை ஒரு கண்கவர் மாயாஜால உலகிற்குள் அழைத்துச் செல்லும் வகையில், படத்தின் ட்ரெய்லர் பாருவின் (ஷ்ரத்த ஸ்ரீநாத்) வாழ்க்கையையும், அவர் தன்னுடைய புதிய அபார்ட்மெண்ட்டில் வரை படங்களும், ஓவியங்களும் நிறைந்த ஒரு டைரியையும் எப்படிக் கண்டுபிடிக்கிறார் என்பதையும் ட்ரெய்லர் உணர்த்தியது. அந்த ஓவியங்களால் கவரப்பட்ட பாரு, அந்த ஓவியரைத் தேடி புறப்படுகிறார். அவர்தான் மாறா (ஆர். மாதவன்). ஆன்மாவைக் குளிரச் செய்யும் அனுபவத்தைத் தரக்கூடிய கலை, இசை, நாடகம், காதல், நம்பிக்கை ஆகியவற்றைக் கொண்ட ஒரு புதிய உலகத்துக்குள் அவர் பயணப்படுகிறார்.

திலிப் இயக்கியுள்ள மாறா திரைப்படத்தை ப்ரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஷ்ருதி நல்லப்பா ஆகியோர் ப்ரமோத் பிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ளனர். இதில் ஆர்.மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் அலெக்ஸாண்டர் பாபு, ஷிவதா நாயர், மௌலி, பத்மாவதி ராவ், அபிராமி ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.இந்தியா உள்ளிட்ட 200 நாடுகளிலும், பிரதேசங்களில் உள்ள ப்ரைம் உறுப்பினர்கள் மாறா படத்தை வரும் 2021, ஜனவரி 8 முதல் பிரத்யேகமாக அமேசான் ப்ரைம் வீடியோவில் தமிழில் காணலாம்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை