விஜய், அஜீத் படங்களில் நடிக்கும்போதும் தங்களுக்காக பணியாற்றிப் படக்குழுவினர்களை மகிழ்விக்கப் பரிசுகள் அளிப்பதுண்டு. விஜய் தனது படக் குழுவினருக்குத் தங்க நாணயம் அளித்திருக்கிறார். நடிகர் அஜீத் படக் குழுவினருக்கு தன் கையால் பிரியாணி சமைத்தளிப்பார். ஒரு நடிகர் படக் குழுவினருக்கு 100 ஸ்மார்ட் போன்கள் பரிசளித்திருக்கிறார். அவர் வேறுயாருமல்ல சோனு சூட் தான். கொரோனா காலகட்டத்தில் புலம்பெயர்ந்து வேலை தேடி வந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்தபோது அவர்கள் அனைவரையும் பஸ்களிலும் ரயில் மற்றும் விமானத்தில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார். சுமார் 7 லட்சம் பேர்களை அவர் இதுபோல் மீட்டிருக்கிறார்.
வடநாட்டு கிராமப் பகுதியில் பள்ளிக்கூடம் தூரமாக இருக்கிறது என்பதால் அந்த கிராமத்தில் உள்ள மாணவ, மாணவிகள் பள்ளியிலிருந்து நின்றுவிட்டார்கள் என்பதை அறிந்து அந்த கிராமத்தில் உள்ள அத்தனை பேருக்கும் சைக்கிள் வாங்கி தந்தார். வெளிநாட்டில் டாக்டர் படிப்பு படிக்கச் சென்று திரும்பி வரமுடியாமல் இருந்தவர்களை அங்கிருந்து இந்தியாவுக்கு விமானம் மூலம் அழைத்து வந்தார். ஏர் உழுவதற்கு மாடு வாங்க முடியாமல் தனது மகள்களை ஏரில் பூட்டி உழுத விவசாயிக்கு டிராக்டர் வாங்கி தந்தார்.
இதுபோல் சோனு சூட் செய்த உதவி கணக்கிலடங்காதது. இன்னமும் உதவிகளைத் தொடர்ந்து வருகிறார் சோனு சூட். அவரது உதவி மனப்பான்மை அவரை மக்கள் மனதில் ஹீரோவாக பதிய வைத்திருக்கிறது.சமீபத்தில் சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா படப்பிடிப்பில் கலந்து கொள்ள சோனு சூட் ஐதராபாத் வந்தார். படக்குழுவில் பல தொழிலாளர்கள் பணியாற்றினர். பலர் வறுமையில் இருந்த நிலையில் அவர்கள் பிள்ளைகள் ஆன்லைன் வகுப்புகளை செல்போன் இல்லாததால் பயில முடியவில்லை. இந்த தகவல் சோனு சூட்டுக்கு தெரிய வர அவர் படக் குழுவில் பணியாற்றிய 100 தொழிலாளர்களுக்கு ஸ்மார்ட் போன்கள் வாங்கி பரிசளித்தார். இந்த உதவியால் தங்களது பிள்ளைகள் ஆன்லைன் வகுப்பில் படிக்க முடியும் என்று அவர்கள் கூறினார்கள்.