திரைப்படங்களில் பாடல்கள் ஆடியோக்களாக வெளியாகி ஹிட் ஆகி வந்த காலங்கள் மலையேறிவிட்டது. இப்போதெல்லாம் பாடல் வீடியோக்கள் யுடியூபில் நேரடியாக வெளியாகி உலகம் முழுவதும் பார்வையாளர்களைக் கவர்ந்து ஹிட் மட்டுமல்ல சூப்பர் ஹிட்டாகி வருகிறது. தமிழில் சாதனை படைத்த பாடலாக அமைந்தது தனுஷ் சாய் பல்லவி நடித்த ரவுடி பேபி பாடல். மாரி 2 படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் யூடியூபில் புதிய சாதனை ஒன்றை படைத்தது.
கடந்த 2018-ம் ஆண்டுமாரி 2 வெளியானது. யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். இந்த படத்தின் ரவுடி பேபி பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. தனுஷ் எழுதிப் பாடி நடித்திருந்தார். இந்த பாடலுக்கு பிரபு தேவா நடனம் அமைத்திருந்தார். இதில் தனுஷ், சாய் பல்லவியின் நடனம் அசத்தலாக அமைக்கப்பட அவர்கள் இருவரும் அற்புதமாக ஆடி பட்டையைக் கிளப்பினார்கள்.யூடியூப்பில் இந்த பாடல் சர்வதேச பில்போர்ட் இசைப் பட்டியல் இடம் பெற்று சாதனை படைத்தது. இப்பாடல் வெளியானது முதல் பல்வேறு சாதனைகளைப் படைத்தது. யூடியூபில் 1 பில்லியன், அதாவது 100 கோடி முறை பார்க்கப்பட்டுள்ளது.
தென்னிந்தியத் திரையுலகில் ஒரு திரைப்படப் பாடல் 1 பில்லியன் சாதனையைப் படைப்பது இதுவே முதல் முறை. இதற்கு முன்பு ஓரிரு இந்திப் பாடல்கள் மட்டுமே 1 பில்லியன் சாதனையைப் படைத்துள்ளது. இந்திய அளவில் அதிக முறை பார்க்கப்பட்ட பாடல் என்ற வரிசையில் ரவுடி பேபி 5-வது இடத்தில் உள்ளது. தற்போது மற்றொரு பாடல் ரவுடி பேபியை பின் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 500 மில்லியன் வியூஸ் பெற்று அசத்தி இருக்கிறது.தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடித்த படம் அலா வைகுந்த புரம்லோ. இதில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்திருந்தார். த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கிய இப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. எஸ்.தமன் இசை அமைத்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற எல்லா பாடல்களும் ஹிட் ஆனது. குறிப்பாக புட்ட பொம்மா என்ற பாடலுக்குத் தனி இடம் கிடைத்தது. அல்லு அர்ஜூன், பூஜா ஹெக்டே அந்த பாடலுக்கு அவ்வளவு அழகாக நடனம் ஆடியிருந்தார்கள்.
இப்பாடல் நடனத்தை ஜானி மாஸ்டர் அமைத்தார். காட்சிகளும் ரிச்சாக படமாக்கப்பட்டிருந்தது. இப்பாடல் யூடியூபில் சில மாதங்களுக்கு முன் 150 மில்லியன் வியூஸ் பெற்று சாதனை படைத்தது. ஆனாலும் சலிக்காமல் பாடலை பார்த்த வண்ணம் உள்ளனர். தற்போது 500 பில்லியன் வியூஸ் பெற்று பெரிய சாதனையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தகவலை கீதா ஆர்ட்ஸ் பட நிறுவனம் டிவிட்டரில் வெளியிட்டுக் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறது.ஏற்கனவே இந்த பாடல் ஹாலிவுட்டையும் கடந்து ஆஸ்திரேலியா வரை பேசப்பட்டது. ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் வார்னர் தனது மனைவியுடன் சேர்ந்து இந்த பாடலுக்கு டிக் டாக்கில் நடனம் ஆடி பகிர்ந்தார். நடிகை திஷா பதானி பாடலுக்கு நடனம் ஆடிய அல்லு அர்ஜுனை பாராட்டினார். நடிகை ஷில்பா ஷெட்டி பாடலுக்கு டிக் டாக்கில் நடன ஆடினார்.