மணிரத்னம் படத்தில் இணையும் மற்றொரு பிரபல நடிகர்..

by Chandru, Jan 9, 2021, 13:29 PM IST

நடிகர் ரஹ்மானை ஞாபகம் இருக்கிறதா? நிலவே மலரே படத்தில் 1986 ம் ஆண்டு அறிமுகமானவர். தொடர்ந்து அன்புள்ள அப்பா, சீதா, நீ பாதி நான் பாதி, உடன்பிறப்பு, தூத்துக்குடி, பில்லா எனப் பல படங்களில் நடித்திருக்கிறார். இவரது பயணம் மிகவும் நீண்டது. கே,பாலசந்தர், எஸ்.ஏ.சந்திரசேகர் என பிரபல இயக்குனர்களிடம் பணியாற்றி இருக்கிறார். தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்திருக்கிறார். இவருடன் வந்த பல நடிகர்கள் காணாமல் போனார்கள்.

ஆனால் தனக்கென ஒரு இடத்தை இன்றளவும் தக்க வைத்துக்கொண்டிருக்கிறார். வந்த வாய்ப்புகளை எல்லாம் ஏற்காமல் எது தனக்குப் பொருந்துமோ அந்த படங்களை மட்டுமே ஏற்று நடித்ததால் அவரது பட எண்ணிக்கையின் நீளம் சற்று குறைந்திருக்கிறது. நல்ல வேடங்களுக்காக அவரது காத்திருப்பு அவருக்குக் கைகொடுத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். கடந்த 2016ம் ஆண்டு துருவங்கள் பதினாறு என்ற படத்தில் வித்தியாசமான போலீஸ் அதிகாரி வேடம் ஏற்று நடித்திருந்தார்.

அப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. கடந்த ஆண்டில் அவர் நிறையப் படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆபரேஷன் அரபைமா, சர்வாதிகாரி, நாடக மேடை, போன்ற பல படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். தெலுங்கில் சம்பத் நந்தி இயக்கத்தில் கோபி சந்துடன் நடித்து வரும் ரஹ்மான், விரைவில் இயக்குனர் மணிரத்னத்தின் மல்டிஸ்டார் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் இணைகிறார். புத்தாண்டு ரஹ்மானைப் பொறுத்த வரை மிகுந்த உற்சாகமான வருடம் என்று தான் சொல்லவேண்டும். இயக்குனர் மோகன் ராஜாவின் உதவியாளர் சுப்புராம் இயக்கத்தில் ரஹ்மான் கதாநாயகனாக நடிக்கும் பெயர் சூட்டப்படாத படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாக உள்ளது .

மேலும் அஹம்மத் இயக்கத்தில் அர்ஜுன், 'ஜெயம்' ரவி ஆகியோருடன் இணைந்த படமான ' ஜன கன மன ', விஷாலுடன் 'துப்பறிவாளன் 2' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். தமிழ் ,தெலுங்கு பிசியாக உள்ள ரஹ்மான் மலையாளத்தில் புதுமுக இயக்குனர் சார்ல்ஸ் ஜோசபின் ' சமரா ' படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் காஷ்மீரில் ஆரம்பமாகிறது. 2021 ரஹ்மானுக்கு பிசி ஆண்டாக அமைகிறது .

You'r reading மணிரத்னம் படத்தில் இணையும் மற்றொரு பிரபல நடிகர்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை