முதல் கொரோனாவை முற்றிலும் ஒழிந்தபாடில்லை இந்நிலையில் உருமாறிய கொரோனா வலம் வந்து மக்களையும் அரசுகளையும் அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா பரவி வருகிறது. இதனால் இங்கிலாந்திலிருந்து வருபவர்களுக்கு இந்தியாவிலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்திலேயே உருமாறிய கொரோனாவை தடுக்க 3வது முறையாக ஊரடங்கு உத்தரவை அந்நாட்டு அரசு பிறப்பித்திருக்கிறது. கடுமையான விதிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளது. மீறினால் அபராதம், ஜெயில் தண்டனை என போலீஸார் நடவடிக்கை எடுக்கின்றனர்.
இந்நிலையில் லண்டனில் படப்பிடிப்புக்குச் சென்ற பிரபல நடிகை கொரோனா விதிமுறைகளை மீறியதாகப் பரபரப்பு எழுந்துள்ளது. அந்த பிரபல நடிகை வேறு யாருமல்ல இந்தி நடிகை பிரியங்கா சோப்ராதான். இனி இவரை ஹாலிவுட் நடிகை என்றுதான் சொல்ல வேண்டும். அந்தளவுக்கு அவர் ஹாலிவுட் படங்களில் ஊறிக் கொண்டிருக்கிறார். நடிப்பதுடன் அமெரிக்கப் பாப் பாடகர் நிக் ஜோனஸை திருமணம் செய்துக்கொண்டார். அமெரிக்காவிலேயே வசித்தும் வருகிறார்.
ஏற்கனவே ஒன்றிரண்டு ஹாலிவுட் படங்களில் நடித்த பிரியங்கா தற்போது டெக்ஸ்ட் ஃபார் யூ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு லண்டனில் நடக்கிறது. இதற்காகக் கணவர் மற்றும் தனது தாயாருடன் லண்டன் சென்றிருக்கிறார். உருமாறிய கொரோனாவால் லண்டனிலும் ஊரடங்கு அமலில் உள்ளது. அந்தவிதியை மீறி பிரியங்கா சோப்ரா சலூனுக்கு சென்றதாகச் சர்ச்சை எழுந்தது. அவருடன் சிகை அலங்காரம் செய்பவரும் சென்றார். அவர்களை வழி மடக்கிய போலீஸார் விசாரித்து எச்சரித்து அனுப்பியதாக தகவல் பரவியது. மேலும் சலூன் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் அப்படி எதுவுமே நடக்கவில்லை என்று பிரியங்காவின் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார். லண்டனில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அதற்குத் தகுந்த அனுமதி பெறப்பட்டிருக்கிறது. படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக ஹேர் கலரிங் செய்யப் பிரியங்கா சென்றார். அதுவும் போலீஸ் அனுமதி பெற்றே சென்றார். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் சரியாக கடைப்பிடிக்கப்பட்டன. விதி மீறல் எதுவும் நடக்கவில்லை என அவர் தெரிவித்தார்.