கேரளாவில் மாஸ்டர் ரிலீஸ் ஆகுமா? தியேட்டர்கள் சங்கத்தினருடன் கேரள முதல்வர் இன்று ஆலோசனை

by Nishanth, Jan 11, 2021, 09:19 AM IST

கேரளாவில் சினிமா தியேட்டர்களை திறக்க கேரள அரசு அனுமதி அளித்தும் பல்வேறு காரணங்களால் இதுவரை கேரளாவில் எந்த தியேட்டர்களும் திறக்கப்படவில்லை. இதையடுத்து தியேட்டர் உரிமையாளர்கள், சினிமா விநியோகஸ்தர்கள் மற்றும் மலையாள சினிமா துறையைச் சேர்ந்த சங்கத்தினருடன் கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் கேரளாவில் இந்த வாரம் முதல் தியேட்டர்கள் திறக்கப்படுமா என தெரியவரும்.

கொரோனா பரவலுக்கு பின்னர் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் படிப்படியாக சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கேரளாவிலும் தியேட்டர்களை திறக்க வேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர். அதற்கு முன்னதாக தங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 5ம் தேதி முதல் சினிமா தியேட்டர்களை திறக்க கேரள அரசு அனுமதி அளித்தது.

ஆனால் ஏற்கனவே 10 மாதங்களாக தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளதால் லட்சக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், எனவே மின் கட்டணத்தில் சலுகை, கேளிக்கை வரி ரத்து உள்படப் பல சலுகைகள் வழங்க வேண்டும் என்றும் தியேட்டர் உரிமையாளர் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். தங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை தியேட்டர்களை திறக்க முடியாது என்று கேரள தியேட்டர்கள் உரிமையாளர் சங்கத்தினர் கூறியிருந்தனர். இதனால் அரசு அனுமதி அளித்தும் இதுவரை கேரளாவில் தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. இதற்கிடையே விஜய்யின் மாஸ்டர் படம் வெளியாகும் 13ம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்கப்படலாம் என்றும் கூறப்பட்டது. ஆனால் அதற்குக் கேரள பிலிம் சேம்பர் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில் தியேட்டர்களை திறப்பது குறித்து ஆலோசிப்பதற்காக இன்று திருவனந்தபுரத்தில் பேச்சுவார்த்தை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் கேரள பிலிம்சேம்பர், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர், சினிமா வினியோகஸ்தர்கள் மற்றும் மலையாள திரைத்துறையை சேர்ந்த பல்வேறு சங்க பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். கூட்டத்தில், தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கினால் மட்டுமே சினிமா தியேட்டர்களை திறக்க முடியும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைக்க தீர்மானத்துள்ளனர். எனவே இந்த விவகாரத்தில் கேரள அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என கருதப்படுகிறது. தியேட்டர் உரிமையாளர்களின் கோரிக்கைகளை கேரள அரசு ஏற்றால் இந்த வாரமே கேரளாவில் சினிமா தியேட்டர்கள் திறக்கப்படும் என்றும், விஜய்யின் மாஸ்டர் படமும் ரிலீசாக வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்