சில ஹீரோ, ஹீரோயின்கள் காரை மட்டுமே விடாபிடியாக பிடித்துக்கொண்டிருக்காமல் மோட்டார் சைக்கிள், சைக்கிளிலும் வலம் வருகின்றனர். ஹெல்மெட் மாட்டிக்கொண்டு சிக்னலில் நம் அருகிலேயே கூட அஜீத், சூர்யா போன்றவர்கள் மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருக்கலாம். அஜீத் ஏற்கனவே கார், பைக் ரேஸர். இதனால் விலை உயர்ந்த ரேஸ் கார், ரேஸ் பைக் வாங்கி வைத்திருக்கிறார். ஓய்வு நேரத்தில் அதை எடுத்துக்கொண்டு சுற்றுவதுண்டு. ஐதராபாத்தில் நடந்த வலிமை பட ஷூட்டிங்கிற்கு அவர் பைக்கில் சென்று பங்கேற்றிருக்கிறார். சில சமயம் வெளியூர் பிரயாணத்துக்கு பைக்கை பயன்படுத்துகிறார். நடிகர் சூர்யாவும் தனது பிள்ளைகளை அமர்த்திக் கொண்டு பள்ளிக்கு கொண்டு சென்று விடுவார். நடிகர் ஆர்யா தனது காருக்கு பின்னால் சைக்கிளை ஃபிட் செய்து வைத்துக்கொண்டே சுற்றுகிறார்.
வெளிப்புற படப்பிடிப்புக்கு செல்லும் போது காரை, டிரைவரை ஓட்டச் சொல்லிவிட்டு இவர் சைக்கிளில் சவாரி தொடங்கி விடுகிறார். இப்படித்தான் ஒரு பிரபல நடிகை சைக்கிளில் படப்பிடிப்புக்கு சென்று வருகிறார். சூர்யாவுடன் என் ஜி கே, கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களில் நடித்திருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் தற்போது அஜய் தேவ்கன் நடித்து இயக்கும் மே டே படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறார். இவர் படப்பிடிப்பு லொகேஷனுக்கு சைக்கிளில் புறப்பட்டு விடுகிறார். காரில் சென்றால் டிராபிக்கில் சிக்கி காலதாமதம் ஆவதால் சைக்கிளை பயன்படுத்துகிறாராம். இதுபற்றி அவர் கூறும் போது, படப்பிடிப்பு தளத்துக்கு சைக்கிளில் செல்கிறேன் இது நேரத்தை மிச்சப்படுத்துவதற்கு.
தினமும் 12 கி.மீட்டர் சைக்கிளில் செல்கிறாராம். இதுவே அவருக்கு உடற்பயிற்சியாகவும் இருக்கிறதாம். ரகுல் ப்ரீத் சிங் கடந்த 2 மாதங்களுக்கு முன் பரபரப்பில் சிக்கினார். சுஷாந்த் சிங் ராஜ் புத் வழக்கில் கைதான ரியா சக்ரபோர்த்தி போதை மருந்து விவகாரம் குறித்து அளித்த வாக்கு மூலத்தின் பேரில் ரகுல் ப்ரீத் பெயரும் அடிபட்டது. அவரை போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர். கடந்த மாதம் குடும்பத்தினருடன் ரகுல் மாலத்தீவு சென்று பொழுதை கழித்தார். அங்கிருந்து திரும்பிய பிறகு ரகுல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனால் தனிமைப்படுத்திக்கொண்டு வீட்டில் இருந்தார். சிகிச்சைக்கு பிறகு குணம் ஆனவர் தற்போது படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறார்.