சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் கடன் பிரச்னையின் காரணமாக சில நாள்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவர் எழுதிய கடிதத்தில் தனது தற்கொலைக்குக் காரணம் ஃபைனான்ஸியர் அன்புச் செழியன் என்று எழுதி வைத்துள்ளார்.
அன்புச் செழியனை உடனே கைது செய்ய வேண்டுமென்று அவருக்கு எதிராக சசிகுமார், அமீர், சுசீந்திரன், விஷால் உள்ளிட்டோர் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்தனர்.
இதுபற்றி தயாரிப்பாளர் தாணு பேசும் போது, ''அன்புச் செழியன் எங்களுக்குப் பணம் தரவில்லை என்றால் எங்களால் படம் எடுத்திருக்கவே முடியாது. சிவகார்த்தியேகன் நடித்த ‘ரஜினி முருகன்’ படம் வெளியான நேரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தில் தனது பணத்தை விட்டுக்கொடுத்தவர் அன்புச் செழியன்.
‘உத்தமவில்லன்’ ரிலீஸ் ஆனபோது பண உதவி செய்தார். ‘கபாலி’ படம் ரிலீஸாகி இரண்டு நாள்கள் கழித்துதான் அன்பு தம்பிக்குப் பணமே கொடுத்தேன். எந்த நேரத்தில் போனாலும், ”என்ன வேண்டும், நான் என்ன செய்யணும்” என்றுதான் கேட்பார்.
சசிகுமார் நினைச்சிருந்தா இந்தப் பிரச்னையை ஈஸியா முடிச்சிருக்கலாம் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் சங்கம் என எல்லாவற்றிலும் உறுப்பினராக இருக்கிறார் சசிகுமார். சங்கத்திடம் வந்திருந்தால் பிரச்னை தீர்ந்திருக்கும். அன்புச் செழியன் ரொம்ப நல்லவர்’’ என்று கூறினார்.