காலத்தை வென்ற பாடல்கள் அளித்திருப்பவர் இளையராஜா. அவரது பணி தமிழ் திரையுலகில் இன்னும் தொடர்கிறது. சிம்பொனி இசை அமைத்து புகழ் சேர்த்தார். மேஸ்ட்ரோ என்ற பட்டமும் பெற்றார். பல்வேறு மத்திய, மாநில விருதுகள் பெற்றிருக்கிறார். கடந்த 30 வருடத்துக்கும் மேலாக சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் இசை அமைத்து வந்தார். கடந்த ஓராண்டாக இளையராஜாவை பிரசாத் ஸ்டுடியோவிலிருந்து காலி செய்யச்சொல்லி பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் வற்புறுத்தி வருகிறது. ஆனால் இளையாராஜா அதற்கு மறுத்து வந்தார்.இளையராஜாவுக்கு ஆதரவாக இயக்குனர் பாரதிராஜா, ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட திரையுலகினர் திரண்டு பிரசாத் ஸ்டிடியோ முன்பு கடந்த ஆண்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இளையராஜாவும் பிரசாத் ஸ்டுயோவோ நிர்வாகத்தின் போக்கை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். இந்த நடவடிக்கையால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் அதற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார். ஆனால் பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் இளையராஜாவை அந்த இடத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. சமீபத்தில் இந்த வழக்கில் இளையராஜா தாக்கல் செய்த மனுவில் தனது பொருட்கள் பிரசாத் ஸ்டுடியோவில் இருப்பதாகவும் அதை எடுத்து செல்ல அனுமதிக்க வேண்டும் மேற்கொண்டு எந்த உரிமையும் கோர மாட்டேன் என்று கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதை கோர்ட் ஏற்றுக்கொண்டு இளையராஜாவுக்கு சொந்தமான பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி வழங்கியது.
அதன்படி அங்கிருந்த இசைக்கருவிகள், அவர் வாங்கிய விருதுகள், இசைக்குறிப்புகள் உள்ளிட்ட 160 பொருட்கள், 7 பீரோக்கள் அனைத்தும் 2 லாரிகளில் எடுத்து செல்லப்பட்டன. இந்நிலையில் இசையமைப்பாளர்கள் சங்க தலைவர் தீனா சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறும்போது,50 ஆண்டு காலம் இந்திய சினிமாவுக்குத் தன்னுடைய இசைப் பணியால் சர்வதேச அளவில் கவுரவத்தைப் பெற்றுத் தந்தவர் இளையராஜா. அவர் தற்போது கடினமான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கிய விருதை சங்கத்தின் மூலமாகத் திருப்பி அனுப்பிவிடுங்கள் என்றும் சொல்லி மனமுடைந்திருக்கிறார்" என்று கூறினார். தினா இவ்வாறு கூறியதும் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இளையராஜாவே அப்படி சொன்னாரா என்று தினாவிடம் கேட்டனர். அதற்கு சமாளித்தபடி பதில் அளித்த அவர் அந்த அளவுக்கு அவரது மனம்பாதிக்கப்பட்டிருக்கிறது என்றார். ஆனால் இதுகுறித்து தகவல் அறிந்த இளையராஜா தினாவின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், நான் சொல்லாத கருத்தை சொன்னதாக செய்திகள் பரவி வருகிறது. இது முற்றிலும் தவறு. விருதுகள் திருப்பி அனுப்பிவிடுங்கள் என்ற கருத்தை நான் வெளியிடவே இல்லை என்று தெரிவித்திருக்கிறார். இளையராஜா 2010ம் ஆண்டு மத்திய அரசின் பதம் பூஷண் விருதும், 2018ம் ஆண்டு பத்ம விஷண் விருதும், 5 முறை தேசிய விருதுகளும், 6 முறை தமிழக அரசு விருதுகளும் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.