நடிகர் ராகவா லாரன்ஸ் முனி, காஞ்சனா என திகில் படங்களை இயக்கியும் நடித்து அசத்தினார். இவர் இயக்கிய காஞ்சனா படம் இந்தியில் லக்ஷ்மி பாம் என்ற பெயரில் இந்தியில் ரிமேக் ஆனது.அப்படத்தையும் லாரன்ஸே இயக்கினார். ஒடிடியில் இப்படம் லஷ்மி என்ற பெயர் மாற்றத்துடன் வெளியானது. இதில் அக்ஷய்குமார், கியாரா அத்வானி ஆகியோர் நடித்தனர். ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி 2ம் பாகத்தை பி.வாசு இயக்குகிறார். இப்படத்தில் ரஜினி நடித்த வேட்டையன் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார்.
இதன் அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது. படம் தொடங்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் சென்ற மாதம் ருத்ரன் என்ற படத்தில் லாரன்ஸ் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். ஆனால் படத்தை இயக்குவது யார் என்று அப்போது அறிவிப்பு வெளியாகவில்லை. அந்த படத்தைத் தயாரிப்பாளர் கதிரேசனே இயக்க உள்ளதாகத் தகவல் வெளியானது.
இவர் ஏற்கனவே தனுஷ் நடிக்க வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன், ஆடுகளம் ஆகிய படங்களையும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ஜிகிர்தண்டா போன்ற படங்களை தயாரித்தவர். தற்போது கதிரேசன் இப்படத்தை இயக்குவது உறுதியாகி இருக்கிறது.தயாரிப்பாளர் எஸ்.கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகும் “ருத்ரன்” படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இதில் ராகவா லாரன்ஸ் ஜோடியாகப் பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இப் படத்தை பிரம்மாண்டமாகத் தயாரித்து இயக்க உள்ளார் கதிரேசன்.கே.பி.திருமாறன் கதை, திரைக் கதை எழுதுகிறார். இசையமைப்பாளர் ஜி வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் ஆர்.டி ராஜசேகர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.
இதில் லாரன்ஸ். பிரியா பவானி சங்கருடன், நாசர் பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.லாரன்ஸ் சினிமாவில் கவனம் செலுத்தும் நிலையில் அடுத்த கட்டமாக அவரது குருவான ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கினால் அதில் அவருடன் இணைய திட்டமிட்டிருந்தார்.கடந்த டிசம்பர் மாதம் தனிக் கட்சி தொடங்க உள்ளதாக ரஜினி அறிவித்தவுடன் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய லாரன்ஸ் அவருக்கு வாழ்த்து பகிர்ந்திருந்தார். ரஜினியின் தீவிர ரசிகரான லாரன்ஸ் ரஜினியைப் பற்றி யாராவது விமர்சனம் செய்தால் அவர்களுக்கு பதிலடியும் தந்தார். ரஜினி கட்சி தொடங்கியதும் அந்த கட்சியில் லாரன்ஸ் இணைவார் என்றும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்றும் ரஜினி ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
அண்ணாத்தே படப்பிடிப்பில் பங்கேற்க ரஜினிகாந்த் ஐதராபாத் சென்றார். சில நாட்கள் படப்பிடிப்பு வேகமாக நடந்து வந்த நிலையில் திடீரென்று படப்பிடிப்பில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து படப் பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. ரஜினிகாந்த் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். திடீரென்று அவருக்கு ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். 3 நாள் சிகிச்சைக்குப் பிறகு சென்னை திரும்பிய ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்னை மன்னித்துவிடுங்கள் என்று அறிக்கை வெளியிட்டார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நடிகர் லாரன்சும் அதிர்ச்சி அடைந் தார். ரஜினியை அரசியலுக்கு வரச் சொல்லி ரசிகர்கள் சென்னையில் போராட்டம் நடத்தினார்கள். அதில் லாரன்ஸை கலந்துக்கொள்ள கேட்டனர். அவர் பங்கேற்கவில்லை.
இதுகுறித்து லாரன்ஸ் கூறும் போது,ரஜினிசார் வேறு ஏதாவது காரணம் சொல்லி அரசியலுக்கு வர மறுத்திருந்தால் அவரை வற்புறுத்தலாம் ஆனால் அவர் உடல்நிலையை பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். அவருடன் நெருக்கமாகப் பழகியவன் என்ற முறையில் அவர் உடல்நிலைபற்றி எனக்குத் தெரியும். அவரை வற்புறுத்தி அரசியலுக்கு வரவழைத்து அவருக்கு ஏதாவது நேர்ந்தால் அதைத் தங்கிக்கொள்ள முடியாது எனத் தெரிவித்தார்.ரஜினிகாந்த் அரசியலுக்கு முழுக்கு போட்டதால் லாரன்ஸ் சினிமாவில் முழு கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார்.