பெங்களூரில் கடந்த சில மாதங்களுக்கு முன் போதை மருந்து கடத்தி விற்றதாகச் சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீஸார் துருவி துருவி விசாரணை நடத்தினர். இதில் கன்னட நடிகர், நடிகைகள் சிலருக்குத் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. அதன்படி நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோரை போதை மருந்து தடுப்பு அதிகாரிகள் அழைத்து விசாரணை நடத்தி பிறகு கைது செய்து சிறையில் அடைத்தனர். பெங்களூரு அக்ரஹார சிறையில் இருவரும் ஒரே அறையில் அடைக்கப்பட்டதில் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து இருவரும் வேறு கைதிகள் உள்ள சிறைகளில் பிரித்து அடைக்கப்பட்டனர்.
மாதக் கணக்கில் சிறையில் இருந்த நிலையில் ராகினி ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்தார். ஆனால் அவருக்குக் கீழ் கோர்ட்டில் ஜாமீன் மறுக்கப்பட்டத்து. அதன் பிறகு நடிகை சஞ்சனா கல்ராணி தனது உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதால் சிகிச்சை பெற வேண்டி உள்ளது என்று சொல்லி ஜாமீன் மனுத் தாக்கல் செய்தார். அவருக்குக் கடந்த 2 மாதத்துக்கு முன் ஜாமீன் கிடைத்தது.
இந்நிலையில் ராகினி ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார். அவரது மனு இன்று விசாரிக்கப்பட்டு நீதிபதி அவரை ஜாமீனில் விடுவித்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ராகினிக்கு ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்படுவதாகவும், எனவே அவருக்கு ஜாமீன் பெற உரிமை உண்டு என்றும் கூறினார். ராகினி திவேதியின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தனது வாதத்தின்போது, கடந்த ஆண்டு தேடுதல் வேட்டையில் அதிகாரிகள் எந்த மருந்துகளையும் ராகினி வீட்டிலிருந்து மீட்கவில்லை. அவர் சதித் திட்டத்தின் அடிப்படையில் ராகினி கைது செய்யப்பட்டுள்ளார் என்றார்.கர்நாடக ஆளுநரை பிரதிநிதித்துவப்படுத்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ராகினி திவேதி ஜாமீனை எதிர்த்தார். அவர் கூறும் போது,இது தனிப்பட்ட பயன்பாட்டு விஷயமல்ல. பார்ட்டிகள், பப்கள் மற்றும் ஹோட்டல்களில் போதைப் பொருள் வழங்குவதற்காக ராகினி திவேதி இந்த வழக்கில் இணைக்கப்பட்டார்.
விசாரணையின் போது அவர் போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் பரிமாறிக் கொண்ட செய்திகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. ராகினி திவேதி சக்திவாய்ந்தவர். போதை மருந்து வழக்கில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களை அவர் அழிக்கக் கூடும். குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும் வரை அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்றார்.இருதரப்பு வாதங்களுக்குப் பிறகு ராகினிக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். ராகினி திவேதி கடந்த ஆண்டு செப்டம்பர் 4 ஆம் தேதி, போதைப் பொருள் கட்டுப் பாட்டு பணியகத்தால் (என்.சி.பி) கைது செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து செப்டம்பர் 8 ஆம் தேதி சஞ்சனா கால்ரானி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.பெங்களூரு சிறையில் நான்கு மாதங்கள் அடைபட்டிருந்த ராகினி திவேதி ஜாமீனில் விடுவிக்கப்பட்டதால் அவர் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார்.