Tuesday, Jul 27, 2021

ஆபரேஷன் முடிந்து கமல்ஹாசன் நாளை வீடு திரும்புகிறார்..

by Chandru Jan 21, 2021, 15:04 PM IST

மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கடந்த சில வாரங்களாகத் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது நேர்மையான ஊழலற்ற ஆட்சியை தன்னால் தர முடியும் என்று பேசினார். தன்னை எம்ஜிஆர் வாரிசு என்று அவர் பேசியதால் அதிமுக தலைவர்கள் அவருக்குப் பதிலடி கொடுக்கும் விதத்தில் பிரசாரங்களில் ஈடுபட்டனர்.தமிழகம் முழுவதும் பிரசாரம் முடிந்து சென்னை திரும்பிய கமல்ஹாசன் காலில் அறுவை சிகிச்சை செய்து கொள்ளவிருப்பதாக தெரிவித்தார்.

இதுகுறித்து கமல்ஹாசன் அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தைத் தலை நிமிரச்‌ செய்ய 'சீரமைப்போம்‌ தமிழகத்தை' எனும்‌ முதல்‌ கட்ட தேர்தல்‌ பிரச்சாரத்தைப்‌ பூர்த்தி செய்திருக்கிறேன்‌. ஐந்து பாகங்களாக ஐந்தாயிரம்‌ கிலோமீட்டர்கள்‌ பயணித்து தமிழ்‌ மக்களைச்‌ சந்தித்திருக்கிறேன்‌. மாற்றத்திற்கான மக்கள்‌ எழுச்சியை கண்ணாரக்கண்டு திரும்பியிருக்கிறேன்‌.அது போலவே, கொரானா பொது முடக்கத்தின்‌ போது துவங்கிய 'பிக்பாஸ்‌ - சீசன்‌ 4' தொலைக்காட்சி நிகழ்ச்சியையும்‌ வெற்றிகரமாக முடித்திருக்கிறேன்‌. இதுவும்‌ மக்களுடனான பயணம்தான்‌. நான்கரை கோடி தமிழர்களோடு வாராவாரம்‌ உரையாடியதும்‌, உறவாடியதும்‌ மகிழ்ச்சியூட்டுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்னர்‌ ஏற்பட்ட விபத்தில்‌ காலில்‌ ஒரு அறுவைச்‌ சிகிச்சை செய்திருந்தேன்‌. அதன்‌ தொடர்ச்சியாக, இன்னொரு சர்ஜரி (அறுவை சிகிச்சை) செய்ய வேண்டி இருந்தது. அதுவரை ஓய்வு தேவை என மருத்துவர்கள்‌ அறிவுறுத்தி இருந்தார்கள்‌. அதை மீறித்தான்‌. சினிமா வேலைகளும்‌, அரசியல்‌ சேவைகளும்‌ தொடர்ந்தன. பிரச்சாரத்தைத்‌ துவங்கும் போதே காலில்‌ நல்ல வலி இருந்தது. அதற்கு மக்களின்‌ அன்பே மருந்தாக அமைந்தது. இப்போது சிறிய ஓய்வு கிடைத்திருக்கிறது. ஆகவே, காலில்‌ ஒரு சிறு அறுவைச்‌ சிகிச்சை மேற்கொள்ள இருக்கிறேன்‌. சில நாட்கள்‌ ஓய்வுக்குப்‌பின்‌ மீண்டும்‌ என்‌ பணிகளைப்‌ புதிய விசையுடன்‌ தொடர்வேன்‌.மக்களை நேரில்‌ சந்திக்க இயலாது எனும்‌ மனக்குறையை தொழில்நுட்பத்தின்‌ வாயிலாகப்‌ போக்கிக்கொள்ளலாம்‌ என்றார். இதையடுத்து கமலுக்கு கடந்த 18ம் தேதி காலில் அறுவை சிகிச்சை நடந்தது.

இதுகுறித்து கமல்ஹாசன் மகள்கள் ஸ்ருதி ஹாசன், அக்‌ஷரா ஹாசன் வெளியிட்ட அறிக்கையில், ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துமனையில், மருத்துவர் ஜே.எஸ்.என். மூர்த்தி ஒருங்கிணைப்பில் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் மோகன் குமார் தலைமையில் எங்கள் அப்பாவிற்குக் காலில் சர்ஜரி வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அப்பா நலமாக உற்சாக இருக்கிறார். அப்பாவை மருத்துவர்களும், மருத்துவ பணியாளர்களும் மருத்துவமனை நிர்வாகமும் நல்லமுறையில் பார்த்துக் கொள்கிறார்கள். நான்கைந்து நாட்களுக்குப் பின் அப்பா வீடு திரும்புவார். சில நாட்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் மக்களைச் சந்திப்பார். மகிழ்விப்பார். அனைவரது அன்பிற்கும் பிரார்த்தனைகளுக்கும் எங்களது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம் எனத் தெரிவித்திருந்தனர்.இந்நிலையில் கமல்ஹாசன் நாளை வீடு திரும்புவார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. வீடு திரும்பிய பிறகும் அவர் சில நாட்கள் ஓய்வில் இருக்கிறார். கட்சி பணி மற்றும் திரைப்பட பணிகளை ஆன்லைன் வீடியோக்கள் மூலம் பேசி தீர்வு காண முடிவு செய்திருக்கிறார்.

You'r reading ஆபரேஷன் முடிந்து கமல்ஹாசன் நாளை வீடு திரும்புகிறார்.. Originally posted on The Subeditor Tamil

READ MORE ABOUT :

More Cinema News

அண்மைய செய்திகள்