கொரோனா கால தளர்வு காலத்திலிருந்து நடிகர் சிம்பு புது உற்சாகத்துடன் இருக்கிறார். சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் 28 நாட்களில் நடித்து முடித்தார். சிம்பு எந்த வம்பும் இல்லாமல் படப் பிடிப்பை முடித்த நிலையில் ஏற்கனவே அவரை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர் ஈஸ்வரன் படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்துப் போர்க் கொடி உயர்த்தினார். இதனால் பொங்கல் தினத்தில் படம் வெளிவருமா என்ற சந்தேகம் எழுந்தது. பிரச்சனைகள் பேசி தீர்க்கப்பட்டுத் திட்டமிட்டபடி பொங்கல் தினத்தில் ஈஸ்வரன் படம் திரைக்கு வந்தது.
இதையடுத்து சிம்பு கன்னடத்திலிருந்து தமிழில் ரீமேக் ஆகும் பத்து தல படத்தில் நடிக்கிறார். இதில் அவருடன் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கிறார். நடிகை ப்ரியா பவானி சங்கர், டீஜே, மனுஷ்ய புத்திரன் போன்ற மாறுபட்ட நட்சத்திர கூட்டணியில் நடிகர் கலையரசனும் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.கே.ஈ.ஞானவேல்ராஜா ஸ்டுடியோ க்ரீன் ஃபிலிம் (Studio Green Films ) நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார், “சில்லுன்னு ஒரு காதல், நெடுஞ்சாலை” படப்புகழ் இயக்குநர் ஓபிலி. என்.கிருஷ்ணா இப்படத்தை இயக்குகிறார். படத்தின் படப் பிடிப்பு வரும் கோடை காலத் தில் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.
கன்னடத்தில் வெளியாகி ஹிட்டான முஃப்தி படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகிறது பத்து தல. கன்னடத்தில் இயக்கிய நரதனே தமிழிலும் சிம்பு, கவுதம் கார்த்திக் நடிப்பில் தமிழ் ரீமேக்கை இயக்க ஒப்பந்தமானார்.இந்நிலையில் நரதன் இயக்க ஒப்பந்தமான அந்தப் படம் கைவிடப்பட்டு தற்போது ஓபிலி என். கிருஷ் ணா இயக்க உள்ளார். பத்து தல படப்பிடிப்புக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறார் சிம்பு. அதற்கு முன் குடும்பத்தினருடனும் சகோதரி குழந்தையுடனும் பொழுதைக் கழித்து வருகிறார். அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் சிம்புவுக்கு அவரது தாயார் உஷா ராஜேந்தர் உணவு ஊட்டுகிறார். அதைப் பார்த்த சகோதரியின் குழந்தை மாமா எதுக்கு உனக்கு உணவு ஊட்டிவிடுகிறார் என்று கேட்க, உனக்கு உன் அம்மா உணவு ஊட்டுவதுபோல் எனக்கு என் அம்மா ஊட்டி விடுகிறார் என்றார். இந்த வீடியோவை சிம்பு வெளியிட அதை ரசிகர்களை வைரலாக்கி வருகின்றனர்.