டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு 11வது கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.மத்திய அரசு அமல்படுத்திய மூன்று புதிய வேளாண் சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்யக் கோரி டெல்லியில் விவசாயிகள் சங்கத்தினர் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்தப் போராட்டம் தொடங்கி இரண்டு மாதங்கள் தாண்டிவிட்டது. நாளுக்கு நாள் போராட்டத்தின் தீவிரம் அதிகரித்து வருகிறது.
இதனால் விவசாயிகளின் இந்த போராட்டத்தை நிறுத்த மத்திய அரசு பல முயற்சிகள் எடுத்து வருகின்ற போதிலும் இதுவரை எந்த பலனும் ஏற்படவில்லை. இதுவரை விவசாயிகள் சங்கத்தினருடன் மத்திய அரசு 10 முறை பேச்சுவார்த்தை நடத்தி விட்டது. ஆனால் எந்த பலனும் ஏற்படவில்லை. இதற்கிடையே உச்சநீதிமன்றமும் இந்த விவகாரத்தில் தலையிட்டது. மத்திய அரசு உடனடியாக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தெரிவித்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த 10வது கட்ட பேச்சுவார்த்தையில் புதிய சட்டத்தை 18 மாதங்களுக்குத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. இது தொடர்பாக ஆலோசனை நடத்தி பின்னர் தெரிவிப்பதாக விவசாயிகள் சங்கத்தினர் கூறினர். பின்னர் விவசாய சங்கத்தினர் நடத்திய ஆலோசனையில், மத்திய அரசின் சலுகை தங்களுக்குத் தேவையில்லை என்றும் முழுவதுமாக சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று டெல்லியில் 11வது கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. விவசாயிகள் சங்கத்தினருடன் மத்திய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் பியுஷ் கோயல், சோம் பிரகாஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.