ஆபரேஷன் முடிந்து கமல் வீடு திரும்பினார்..

by Chandru, Jan 22, 2021, 17:56 PM IST

மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கடந்த சில வாரங்களாகத் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். சாலை கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் எனப் பிரச்சாரம் மேற்கொண்டார். நேர்மையான ஊழலற்ற ஆட்சியை தன்னால் தர முடியும் என்று பேசினார். எம்ஜிஆர் வாரிசு நான், அவர் மடியில் தவழ்ந்தவன் இன்றுள்ள பல அமைச்சர்கள் எம்ஜிஆரை நேரில் கூட பார்த்தது கிடையாது என்று அவர் பேசியதால் அதிமுக தலைவர்கள் கமலுக்குப் பதிலடி கொடுக்கும் விதத்தில் பிரச்சாரங்களில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் பிரச்சாரம் முடிந்து சென்னை திரும்பிய கமல்ஹாசன் காலில் அறுவை சிகிச்சை செய்துகொள்ளவிருப்பதாக தெரிவித்தார். இதுகுறித்து கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தைத் தலை நிமிரச்‌ செய்ய 'சீரமைப்போம்‌ தமிழகத்தை' எனும்‌ முதல்‌ கட்ட தேர்தல்‌ பிரச்சாரத்தைப்‌ பூர்த்தி செய்திருக்கிறேன்‌. ஐந்து பாகங்களாக ஐந்தாயிரம்‌கிலோமீட்டர்கள்‌ பயணித்து தமிழ்‌ மக்களைச்‌ சந்தித்திருக்கிறேன்‌. மாற்றத்திற்கான மக்கள்‌ எழுச்சியை கண்ணாரக்கண்டு திரும்பியிருக்கிறேன்‌.

அது போலவே, கொரானா பொது முடக்கத்தின்‌ போது துவங்கிய 'பிக்பாஸ்‌ - சீசன்‌ 4'
தொலைக்காட்சி நிகழ்ச்சியையும்‌ வெற்றிகரமாக முடித்திருக்கிறேன்‌. இதுவும்‌
மக்களுடனான பயணம்தான்‌. நான்கரை கோடி தமிழர்களோடு வாராவாரம்‌ உரையாடியதும்‌, உறவாடியதும்‌ மகிழ்ச்சியூட்டுகிறது.சில ஆண்டுகளுக்கு முன்னர்‌ ஏற்பட்ட விபத்தில்‌ காலில்‌ ஒரு அறுவைச்‌ சிகிச்சை செய்திருந்தேன்‌. அதன்‌ தொடர்ச்சியாக, இன்னொரு சர்ஜரி (அறுவை சிகிச்சை) செய்ய வேண்டி இருந்தது. அதுவரை ஓய்வு தேவை என மருத்துவர்கள்‌ அறிவுறுத்தி இருந்தார்கள்‌. அதை மீறித்தான்‌. சினிமா வேலைகளும்‌, அரசியல்‌ சேவைகளும்‌ தொடர்ந்தன. பிரச்சாரத்தைத்‌ துவங்கும் போதே காலில்‌ நல்ல வலி இருந்தது. அதற்கு மக்களின்‌ அன்பே மருந்தாக அமைந்தது. இப்போது சிறிய ஓய்வு கிடைத்திருக்கிறது. ஆகவே, காலில்‌ ஒரு சிறு அறுவைச்‌ சிகிச்சை மேற்கொள்ள இருக்கிறேன்‌. சில நாட்கள்‌ ஓய்வுக்குப்‌பின்‌ மீண்டும்‌ என்‌ பணிகளைப்‌ புதிய விசையுடன்‌ தொடர்வேன்‌.மக்களை நேரில்‌ சந்திக்க இயலாது எனும்‌ மனக்குறையை தொழில்நுட்பத்தின்‌ வாயிலாகப்‌ போக்கிக்கொள்ளலாம்‌ என்றார்.

இதையடுத்து கமலுக்குக் கடந்த 18ம் தேதி காலில் அறுவை சிகிச்சை நடந்தது. அவருக்கு வலது காலில் எலும்பில் ஏற்பட்ட தொற்றுக்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டு தொற்று ஏற்பட்ட எலும்பை நீக்கினர். இது குறித்து கமல்ஹாசன் மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்‌ஷரா ஹாசன் வெளியிட்ட அறிக்கையில், ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில், மருத்துவர் ஜே.எஸ்.என். மூர்த்தி ஒருங்கிணைப்பில் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் மோகன் குமார் தலைமையில் எங்கள் அப்பாவிற்கு காலில் சர்ஜரி வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அப்பா நலமாக இருக்கிறார். அப்பாவை மருத்துவர்களும், மருத்துவ பணியாளர்களும் மருத்துவமனை நிர்வாகமும் நல்லமுறையில் பார்த்துக் கொள்கிறார்கள். நான்கைந்து நாட்களுக்கு பின் அப்பா வீடு திரும்புவார். சில நாட்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் மக்களைச் சந்திப்பார். மகிழ்விப்பார். அனைவரது அன்பிற்கும் பிரார்த்தனைகளுக்கும் எங்களது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம் எனத் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் கமல்ஹாசன் நாளை வீடு திரும்புவார் என்று நேற்று மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று மதியம் கமல்ஹாசன் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.மருத்துவமனையிலிருந்து புறப்படும் முன் அவர் தனக்குச் சிகிச்சை அளித்த டாக்டர்கள், உதவியாக இருந்த நர்ஸ் மற்றும் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அவர்கள் கமலுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.கமல்ஹாசன் மருத்துவமனையிலிருந்து பட்டினப்பாக்கத்தில் உள்ள வீட்டுக்கு வந்தார். அங்கு அவரை குடும்பத்தினர் வரவேற்றனர். சுமார் ஒருவாரம் அவர் வீட்டில் ஓய்வில் இருக்கிறார்.

இதற்கிடையில் கட்சி பணிகளை வீடியோ கான்பரன்சிங் மூலம் மேற்கொள்கிறார். ஓய்வுக்குப் பிறகு விரைவில் தொண்டர்கள்,ரசிகர்கள், மக்களைச் சந்திக்க உள்ளார்.
முன்னதாக கமல்ஹாசனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட விவரம் குறித்தும் டிஸ்சார்ஜ் ஆவது குறித்தும் மருத்துவமனை நிர்வாகம் இன்று அறிக்கை வெளியிட்டது.

You'r reading ஆபரேஷன் முடிந்து கமல் வீடு திரும்பினார்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை