கொரோனா லாக்டவுன் முடிந்து லாக் டவுன் தளர்வில் நடிகைகள் தங்களை ரிலாக்ஸ் செய்துகொள்ள வெளிநாட்டுச் சுற்றுலா தலங்களுக்குச் சென்று பொழுதை ஜாலியாக கழித்தனர். போதைப் பொருள் வழக்கு புகாரில் சிக்கிய நடிகை ரகுல் ப்ரீதி சிங் பெரிய மனப்பாதிப்பில் இருந்தார். அவரை பற்றி தாறுமாறாகத் தகவல்கள் வெளியாகின. அதை எதிர்த்து கோர்ட் வரை சென்றார். தன்னை பற்றி எழுதுவதற்குத் தடை விதிக்க கோரினார். பிறகு போதை மருந்து புகார் தொடர்பாக போலீஸ் விசாரணைக்கும் ஆஜரானார். மாதக்கணக்கில் இந்த விவகாரத்தில் சிக்கித் தவித்தவர் பிறகு குடும்பத்தினருடன் மாலத்தீவு சென்று வாரக்கணக்கில் தங்கி ரிலாக்ஸ் செய்துவிட்டுத் திரும்பி வந்தார்.
அதன்பிறகு படப்பிடிப்பில் கலந்துகொண்டார். அதுபோல் மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகள் நடிகை ஜான்வி சமீபத்தில் இக்கட்டான சூழலில் சிக்கினார். தான் நடித்து வரும் குட் லக் ஜெர்ரி படத்தின் படப்பிடிப்பிற்காக சண்டிகர் சென்றார். இப்படம் தமிழில் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா ரிமேக் ஆகும். சண்டிகரில் பாட்டியாலா பகுதியில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நிலையில் அப்பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடந்து வந்தது. படப்பிடிப்பில் விவசாய போராட்டக்காரர்கள் புகுந்து ஜான்வியை சுற்றி வளைத்து விவசாயிகளுக்கும், போராட்டத்துக்கும் ஆதரவு தர வேண்டும் என்றனர். ஜான்வி ஆதரவு தெரிவித்தார். இதனால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது.
இதையடுத்து படக் குழுவினர் பாட்டியாலாவில் நடந்த படப்பிடிப்பைப் போராட்ட பகுதியிலிருந்து சுமார் 70 கி.மீட்டருக்கு வெகு தூரம் தள்ளிச் சென்று மீண்டும் படப் பிடிப்பைத் தொடர்ந்தனர். போராட்டக்காரர்களால் பயமும், பதற்றமும் அடைந்த ஜான்வி தன்னை ரிலாக்ஸ் செய்துகொள்ள விரும்பினார். தனது தோழியுடன் தனியாக மரங்கள் அடர்ந்த பகுதிக்குச் சென்று ஓடிப் பிடித்து விளையாடும் விளையாட்டு விளையாடினார். மரங்கள் அடர்ந்து காட்டுப் பகுதிபோல் இருக்கும் அந்த இடத்தின் தரை முழுவதும் சிவப்பு கம்பளம் விரித்ததுபோல் சிவப்பு மலர்கள் பரவிக்கிடந்தது கண்களுக்கு இதமாக இருந்தது. தோழியுடன் நேரத்தைக் கழித்த படத்தை ஜான்வி வெளியிட்டார். ஜான்வி அடுத்து கரண் ஜோஹரின் தோஸ்தானா 2ம் பாகம் படத்தில் நடிக்கிறார்.ஜான்வியை தமிழ் அல்லது தெலுங்கு படத்தில் அறிமுகம் செய்ய சில இயக்குனர்கள் முயற்சித்து வருகின்றனர். ஆனால் அவர் யாருக்கும் பிடிகொடுக்காமல் நழுவி வருகிறார்.