பா ஜவில் இணையும் சிவாஜி மூத்த மகன் மற்றும் பேரன்..? காங்கிரஸ் தொண்டர்கள் அதிர்ச்சி..

by Chandru, Feb 10, 2021, 15:03 PM IST

நடிகர் திலகம் சிவாஜி அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக பணியாற்றி வந்தார். கர்மவீரர் காமராஜர் மீது பற்று கொண்ட சிவாஜி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து காங்கிரஸ் கட்சிக்காக அந்த காலகட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்திருக்கிறார். ஆனால் காங்கிரஸ் கட்சியில் தகுந்த மரியாதை அளிக்கப்படவில்லை என்பதால் அக்கட்சியிலிருந்து விலகி தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியைத் தொடங்கி நடத்தி வந்தார். ஒரு கட்டத்தில் அரசியலிலிருந்து அவர் விலகினார். அதன்பிறகு சிவாஜி குடும்பத்தினர் யாரும் அரசியல் ரீதியான தனிப்பட்ட கட்சியில் இணையாமல் ஒதுங்கி இருந்தனர்.

இந்நிலையில் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் மற்றும் அவரது மகன் துஷ்யந்த் இருவரும் பாரதிய ஜனதா கட்சியில் சேரவிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இது சிவாஜி ரசிகர்கள் மத்தியிலும் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியிலும் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி தமிழ்நாடு காங்கிரஸ்‌ கமிட்டி கலைப்பிரிவு தலைவர் சந்திரசேகரன்‌ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:நடிகர் திலகத்தின்‌ மூத்த புதல்வர்‌ ராம்குமார்‌‌, பா.ஜ.கவில்‌ இணையவிருப்பதாக தகவல்கள்‌ அறிந்து வேதனையும்‌ வருத்தமும்‌ அடைந்தேன்‌. ஒவ்வொருவருக்கும்‌ ஒரு அரசியல்‌ இயக்கத்தில்‌ சேர்ந்து பணியாற்றிடும்‌ உரிமை உண்டு என்றாலும்‌, இப்போது நடிகர்திலகத்தின்‌ புதல்வர்‌ சேரவிருப்பது பா.ஜ.கவில்‌ என்பதுதான்‌ முரண்பாடான விஷயமாக இருக்கிறது,ஏனெனில்‌, நடிகர்திலகம்‌ சிவாஜி, என்றுமே தேசிய உணர்வோடு மதச்சார்பற்ற தலைவராகவும்‌ திகழ்ந்தவர்‌ என்பது அவரோடு பழகிய, பயணித்த என்னைப்‌ போன்றோருக்குத்‌ தெரியும்‌.

“இந்திய நாடு என்வீடு - இந்தியன்‌ என்பது என்பேரு - எல்லா மதமும்‌ என்‌ மதமே,
எதுவும்‌ எனக்குச் சம்மதமே” என்பது நடிகர்திலகத்தின்‌ திரைப்படப்‌ பாடல்‌ மட்டுமல்ல, அவருடைய உள்ளத்தின்‌ வெளிப்பாடும்‌ அதுவே. காங்கிரஸ்‌ கட்சியில்‌ கருத்து வேறுபாடு ஏற்பட்டு வெளியேறியபோதும்‌, ஏன்‌ அரசியலைவிட்டு ஒதுங்கியிருந்தபோதும் கூட, பெருந்தலைவர்‌ காமராஜரின்‌ பெயரை அவர்‌ உச்சரிக்கத்‌ தவறியதே இல்லை. அந்த அளவிற்குப் பெருந்தலைவர்‌ காமராஜரின்‌ சீடராக, பக்தராகக்‌ கடைசி வரை வாழ்ந்து மறைந்த நடிகர் திலகத்தின்‌ புதல்வர்‌, பெருந் தலைவரைக்‌ கொல்ல முயன்ற கூட்டத்தின்‌ பின்னணியில்‌ செயல்படும்‌ கட்சியில்‌ இணைவது எந்த வகையிலும்‌ நடிகர்திலகத்தின்‌ புகழுக்குப்‌ பெருமை சேர்க்காது.

காங்கிரஸ்‌ பேரியக்கத்தைப்‌ பொறுத்தவரைக் கருத்து வேறுபாடுகள்‌ இருந்தாலும்‌, ஒரு குடும்பத்திற்குள்‌ ஏற்படும்‌ சண்டை, சச்சரவு போல - நீரடித்து நீர்‌ விலகாது என்பது போல, கருத்துச்‌ சுதந்திரம்‌, பேச்சுரிமை ஆகியவற்றில்‌ பெரிதும்‌ நம்பிக்கையுடைய கட்சி. அந்தவகையில்‌ கருத்து வேறுபாடுகளால்‌ காங்கிரஸ்‌ கட்சியை விமர்சித்து. வெளியேறிய நடிகர் திலகம்‌ சிவாஜி, அரசியலிலிருந்து விலகியிருந்தாரே தவிரக் காங்கிரசின்‌ கொள்கைகளிலிருந்து, காமராஜர்‌ பற்றிலிருந்து என்றுமே விலகியதில்லை.முப்பது ஆண்டுகளுக்கும்‌ மேலாகக் காங்கிரஸ்‌ கட்சியில்‌ தனிப்பட்ட முறையில்‌ எந்தவொரு பிரதிபலனும்‌ எதிர்பாராமல்‌ உழைத்ததோடு மட்டுமல்ல, பண்டித நேரு,பெருந்தலைவர்‌ காமராஜர்‌, அன்னை இந்திராகாந்தி, தலைவர்‌ ராஜீவ்காந்தி என அனைத்து தலைவர்களின்‌ அன்பையும்‌ பெற்றிருந்தார்‌ நடிகர்திலகம்‌ சிவாஜி. தான்‌ பதவியை விரும்பாதபோதும்‌ தன்னுடைய மன்றத்தைச்‌ சேர்ந்தவர்களுக்கு, ஆதரவாளர்களுக்கு, காங்கிரஸ்‌ கட்சியில்‌ பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களாகப்‌ போட்டியிட வாய்ப்பு பெற்றுக்‌ கொடுத்தார்‌. அவர்களில்‌ பலர்‌ பாராளுமன்ற உறுப்பினர்களாக, சட்டமன்ற உறுப்பினர்களாக வெற்றிபெற்றனர்‌.

உதாரணத்திற்கு, அவரால்‌ முதலில்‌ சட்டமன்ற உறுப்பினரான, ஈ.வி.கே.எஸ்‌. இளங்கோவன்‌, பின்னாளில்‌ மத்திய அமைச்சராகவும்‌, தமிழ்நாடு காங்கிரஸ்‌ தலைவராகவும்‌ உயர்ந்தார்‌ என்பது வரலாறு.எனவே, பா.ஜ.க.வில்‌ இணைவது என்ற நடிகர் திலகத்தின்‌ புதல்வருடைய முடிவு நடிகர் திலகத்தின்‌ புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தக்கூடியதாகத்தான்‌ இருக்கும்‌ என்பதை மட்டும்‌ குறிப்பிட விரும்புவதோடு, என்னைப் போன்ற லட்சோப லட்சம்‌ நடிகர்திலகத்தின்‌ ரசிகர்கள்‌, காமராஜர்‌ தொண்டர்களாக, அவர்‌ காட்டிய பாதையான, காங்கிரஸ்‌ பேரியக்கத்தின்‌ வளர்ச்சிப்‌ பணியில்‌ தொடர்வோம்‌ என்பதையும்‌ தெரிவித்துக்கொள்கிறேன்‌.இவ்வாறு சந்திரசேகரன் கூறி உள்ளார்.

சமீப காலமாக சினிமா பிரபலங்கள் பலர் பா.ஜனதாவில் சேர்ந்து வருகிறார்கள்.
காங்கிரஸின் அகில இந்தியச் செய்தி தொடர்பாளராக இருந்த குஷ்பு சில மாதங்களுக்கு முன் பா.ஜனதாவில் இணைந்தார். ராதாரவி, நமீதா மற்றும் பெப்சி சிவா, பேரரசு போன்றவர்கள் பா.ஜனதாவில் இணைந்தனர்.இந்நிலையில் சிவாஜி மூத்த மகன் ராம்குமாரும், அவரது மகன் துஷயந்த் ஆகியோர் பா.ஜனதாவில் இணைய இருப்பதாகத் தகவல் வெளியானது. தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகனை இன்று ராம்குமார் சந்தித்தார்.

You'r reading பா ஜவில் இணையும் சிவாஜி மூத்த மகன் மற்றும் பேரன்..? காங்கிரஸ் தொண்டர்கள் அதிர்ச்சி.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை