கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் போட்டிகளுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமும், தனி அங்கீகாரம் இருந்தது. ஆனால் கிரிக்கெட்டின் பரிணாம வளர்ச்சியினால் உருவான இருபது ஓவர் போட்டிகள் உலக அரங்கில் மிகப்பெரிய மாற்றத்தையே கொண்டுவந்தது. இதனால் டெஸ்ட் போட்டிகளுக்கான அங்கீகாரம் குறையத் தொடங்கியுள்ளது. ஆனால் டெஸ்ட் போட்டி என்பது மற்ற போட்டிகளை விடவும் முக்கியமானது. இது ஒரு போர் போன்றது. போருக்குத் தயாராகும் போர் வீரனைப் போல், அவர்களின் மன உறுதி, விடாமுயற்சி மற்றும் வெற்றி என்ற இலக்கை அடையும் திட்டங்கள் என அனைத்தும் டெஸ்ட் போட்டியில் விளையாடும் வீரர்களுக்கும் இருந்தாக வேண்டும்.
உலக அரங்கில் டெஸ்ட் போட்டிகளின் மீதான ஈர்ப்பை அதிகரிக்க ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் எனும் தொடரை நடத்தி வருகிறது. இந்த தொடரின் லீக் போட்டிகள் கடந்த 2019 லிருந்து 2020 வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்காளதேசம் அணிகள் பங்கேற்று வருகின்றன. இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் ஆறு டெஸ்ட் தொடர்களில் விளையாட வேண்டும். அதில் மூன்று தொடர் உள்ளூரிலும், மூன்று தொடர் வெளிநாடுகளிலும் நடைபெறும் எனவும் வரையறுக்கப்பட்டது.
இந்த டெஸ்ட் தொடரானது 2,3,4 மற்றும் 5 போட்டிகளைக் கொண்டதாக இருக்கும். ஒவ்வொரு தொடருக்கும் 120 புள்ளிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 2 போட்டிகள் கொண்ட தொடரில் போட்டிக்கு 60 புள்ளிகள், 3 போட்டிகள் கொண்ட தொடரில் போட்டிக்கு 40 புள்ளிகள், 4 போட்டிகள் கொண்ட தொடரில் போட்டிக்கு 30 புள்ளிகள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட தொடரில் போட்டிக்கு 24 புள்ளிகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி தனது 6 வது தொடரை சொந்த ஊரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்றது இதில் இந்திய அணி படுதோல்வி அடைந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த தொடருக்கு முன்னர் இந்திய அணி 71.70 சதவீதத்துடன், 430 புள்ளிகள் பெற்று தரவரிசையில் முதலிடத்தில் இருந்தது. ஆனால் சென்னை டெஸ்ட்டில் ஏற்பட்டு தோல்வியால் நான்காம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் இங்கிலாந்து அணியும் 6 வது தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் பெற்ற வெற்றியின் மூலம் 70.2 சதவீதத்துடன், 442 புள்ளிகள் பெற்று முதலிடத்துக்குச் சென்றுள்ளது.
இந்த தொடரில் ஏற்கனவே இரண்டாவது இடத்தை இறுதி செய்துள்ள நியுசிலாந்து அணி 5 தொடரில் விளையாடி 70 சதவீதத்துடன், 420 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா அணி நான்கு தொடரில் விளையாடி 69.2 சதவீதத்துடன் 332 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது. ஐந்தாவது இடத்தில் பாகிஸ்தான், ஆறாவது இடத்தில் தென் ஆப்பிரிக்கா, ஏழாவது இடத்தில் மேற்கிந்தியத் தீவுகள், எட்டாவது இடத்தில் இலங்கை மற்றும் ஒன்பதாவது இடத்தில் வங்காள தேசம் ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன.
இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் முதல் இடத்தை பிடிக்க இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீதமுள்ள போட்டிகளில் 3-1 அல்லது 2-1 என்ற முன்னிலையில் வெற்றி பெற்றாக வேண்டும். அதேபோல் இங்கிலாந்து அணி முதலிடத்தில் நீடிக்க வேண்டும் என்றால் இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-3, 0-3 மற்றும் 0-4 என்ற முன்னிலையில் வெற்றி பெற்றாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளது. இவ்வாறு இந்த தொடரில் இரண்டு அணிகளும் வெற்றி பெறாத பட்சத்தில் அந்த வாய்ப்பு ஆஸ்திரேலியா அணிக்குக் கிடைத்துவிடும். இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பு இந்தியாவின் கையில் தான் உள்ளது.