மீண்டும் தயாரிப்பாளர்-தியேட்டர் அதிபர் மோதல்.. புது பட ரிலீஸ் தடை வருமா?

by Chandru, Feb 11, 2021, 10:52 AM IST

கொரோனா ஊரடங்கில் தியேட்டர்கள் மூடல் முதல் பட ரிலீஸ், ஷூட்டிங் என அத்தனை பணிகளும் முடங்கியது. அதே சமயம் தியேட்டர் தரப்புக்கும் தயாரிப்பாளர்கள் தரப்புக்கும் ஒரு மோதல் நடந்தது. விபி எஃப் கட்டணத்தை முற்றிலுமாக ரத்து செய்தால் தான் புதிய படங்கள் ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவித்தனர். இதனால் தியேட்டர்கள் திறந்த நிலையிலும் தீபாவளி காலகட்டத்தில் பெரிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. பின்னர் இது கியூப் நிறுவனங்களுடனான மோதலாகவும் மாறியது. முத்தரப்பு பேச்சு வார்த்தை நடந்த நிலையில் சில சமரசம் மேற்கொள்ளப்பட்டது.

முன்னதாக சூர்யா நடித்த சூரரைப்போற்று, பொன்மகள் வந்தாள் போன சில படங்கள் ஒடிடி தளத்தில் ரிலீஸ் ஆனது. அதற்கு தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சமந்தப்பட்ட நிறுவனங்களின் படங்களை வெளியிட மாட்டோம் என அறிவித்தனர். கொரோனா லாக்டவுனில் முடங்கி இருந்த மக்கள் தியேட்டருக்கு வருவார்களா? இல்லையா? என்ற குழப்ப நிலை நீடித்த நிலையில் விஜய்யின் மாஸ்டர் படத்தை தியேட்டர் அதிபர்கள் மலை போல நம்பினர். அவர்கள் எதிர்ப்பார்ப்பபை நிறைவேற்றும் வகையில் மாஸ்டர் படம் தியேட்டரில் வெளியிடப்பட்டது. அதற்காக விஜய்க்கும் அப்பட தயாரிப்பாளர்களுக்கும் என்றி தெரிவித்தனர்.

மாஸ்டர் வெளியான நிலையில் ரசிகர்கள் மீண்டும் திரள் திரளாக தியேட்டருக்கு வந்தார்கள். 200 கோடி வசூல் சாதனை செய்த நிலையில் படத்தை ஒடிடியில் வெளியிட முடிவு செய்தனர். அதற்கு தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சில தியேட்டர்களில் மாஸ்டர் படத்தை எடுத்துவிட்டனர். தற்போது தியேட்டர் தரப்புக்கும், தயாரிப்பாளர்கள் தரப்புக்கும் ஒடிடி விவகார மோதல் முற்றத் தொடங்கி இருக்கிறது. சமுத்திரக்கனி நடித்துள்ள ஏலே படத்தை 12ம் தேதி தியேட்டரில் வெளியிடத் திட்டமிட்டனர். பிறகு ஓரிரு வாரம் கழித்து ஒடிடியில் வெளியிட ஏற்பாடானது. இதையறிந்த தியேட்டர் அதிபர்கள் ஏலே படத்தை தியேட்டரில் வெளியிட மறுத்துள்ளனர். படம் வெளியாகி 30 நாட்கள் வரை ஒடிடியில் வெளியிட மாட்டோம் என்று கடிதம் தந்தால்தான் ஏலே படத்தை தியேட்டரில் வெளியிடுவோம் என்று தீர்மானம் செய்தனர். இது தயாரிப்பாளர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தியேட்டர் அதிபர்களின் இந்த முடிவுக்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார் பாரதி ராஜா.

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பாரதிராஜா இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது:கொரோனா கால சிரமங்களை கடப்பதற்கு முன்னரே திரையரங்குகள் பலவிதமான இன்னல்களைத் தயாரிப்பாளர்கள் மீது தொடர்ந்து அடுக்கி வருகிறது. கடந்த 4 ஆண்டுகளாக VPF, Transparency, TMC, Convenience fee என பல்வேறு காரணங்களுக்காக கடுமையாகப் போராடி வருகிறோம். ஒன்றிலும் தீர்வு கண்டபாடில்லை. திரைப்படங்கள் தயாரிக்கப்படுவது மக்களை மகிழ்விக்கவேயன்றி திரையரங்குகளுக்கு இரையாகுவதற்கு அல்ல.இந்த இன்னல்களுக்கு நடுவே ஒடிடி மூலம் மக்களை நேரிடையாக சென்றடைய முடியும் என்ற நிலை கிடைக்கப்பெற்ற பொழுது உண்மையில் தயாரிப்பாளர்கள் நிம்மதிப் பெருமூச்சடைந்தனர். கடன்சுமை தவிர்க்க சில படங்கள் வெளியிட்ட பொழுது தயாரிப்பாளர்களுக்கு அவ்வளவு நிம்மதி. இதற்கு திரையரங்குகள் அபயக் கூக்குரல் எழுப்பினர்.

அதேசமயம் சில தயாரிப்பாளர்கள் நல்ல விலை கிட்டியபொழுதும், திரையரங்கங்களை தேர்ந்தெடுத்து வெளியிட்டனர். உடனே அவர்களைத் தெய்வம் என்றார்கள், விளக்கேற்றி நன்றி தெரிவித்தனர். எல்லோருக்கும் லாபம் என்றவுடன் மகிழ்ந்த தயாரிப்பாளர் தனது நஷ்டத்தைப் போக்க, 14 -வது நாள் ஒடிடியில் படத்தை வெளியிட முடிவு செய்த மறுநிமிடம், அவரை வாய்க்கு வந்தபடி திட்டினார்கள், தண்டம் வைத்தார்கள். ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து மனிதனைக்கடித்த கதையை நேரில் கண்டோம்.இந்நிலையில் வரும் 12 – ஆம் தேதி “ஏலே” திரைப்படத் தயாரிப்பாளர் தன்னைமட்டும் காக்க நினைக்காமல், திரையரங்குகளும் வாழ வேண்டும் என்று, கோடி ரூபாய் வரை செலவு செய்து படத்தை வெளியிட முற்படுகிறார். ஆனால் இன்று திரையரங்குகளோ, நாங்கள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தும், அதை தவிர்த்துவிட்டு தயாரிப்பாளர்கள் 30 நாட்கள் வரை OTT -ல் வெளியிடமாட்டேன் எனக் கடிதம் கொடுத்தால் மட்டும் தான் படங்களை வெளியிடுவோம் என அனைவரும் தன்னிச்சையாக முடிவெடுத்து நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நின்றுவிடும் என நினைக்க வேண்டாம்.

தயாரிப்பாளர்கள் இல்லாமல் திரைப்படங்கள் இல்லை என்பதை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறோம். “ஏலே” திரைப்படம் யார் தடுத்தாலும் மக்களை சென்றடையும். வெற்றியும் பெறும் திரையரங்குகளின் எதேச்சதிகாரத்தை முற்றிலும் தவிர்த்தால்தான் கலைத்துறை மீளும் என்றால் அதற்கான நாள் வெகு தொலைவில் இல்லை. இனி அதைத் துரிதப்படுத்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் (TFAPA) செயல்படும் என்பதைத் திரையரங்குகளுக்கும் அதை ஆட்டு விக்கும் ஆளுமைகளுக்கும் தெரிவித்துக்கொள்கிறோம்.பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண்பதே சினிமாவை வாழ வைக்கும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் .இவ்வாறு தலைவர் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா கூறி உள்ளார்.தியேட்டர், தயாரிப்பாளர் இருதரப்புக்கும் தற்போது உருவாகும் இந்த மோதல் நாட்கள் செல்லச் செல்ல அதிகரிக்கும் என்றும் புதிய படங்கள் வெளியீடு தியேட்டர் ரிலீஸுக்கு தடை வருமா என்ற அச்சம் எழுந்துள்ளது.

You'r reading மீண்டும் தயாரிப்பாளர்-தியேட்டர் அதிபர் மோதல்.. புது பட ரிலீஸ் தடை வருமா? Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை